“இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் வியூக குழுவின் முதலாவது கூட்டம் டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
லோக்சபா தேர்தலுக்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியில் தற்போதைய நிலையில் 28 கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் பல கட்சிகள் இக்கூட்டணியில் இணையக் கூடும் என கூறப்படுகிறது.
“இந்தியா” கூட்டணி இதுவரை 3 ஆலோசனைக் கூட்டங்களை பாட்னா, பெங்களூர், மும்பை நகரங்களில் நடத்தி உள்ளன. மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டன.
இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை விரைவாக மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. பாஜக போட்டியிடும் 400க்கும் மேற்பட்டத் தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது என்கின்றன தகவல்கள்.
மேலும் “இந்தியா” கூட்டணியின் தொலைநோக்கு திட்டம் என்ன என்பது குறித்து அக்டோபர் 2-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
இதனிடையே “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, சோசியல் மீடியா குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 22-ந் தேதி நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் குறித்தும் இன்று விவாதிக்கப்படுகிறது.
ஆக, இந்தியா கூட்டணி தனது முன்னெடுப்பை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் கொண்டு செல்கிறது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடக்கும் வரை பாஜக அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
இந்தியா
என கூட்டணிக்கு பெயர் சூட்டியதில் இருந்து தனக்கு சரியான போட்டி உருவாகி விட்டதை உணர்ந்த பாஜக தனது போக்கை மாற்றிக் கொண்டு தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் “இந்தியா” கூட்டணி பாஜகவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது. உ.பி. மாநிலம் கோஷி தொகுதியிலேயே “இந்தியா” கூட்டணியின் பொதுவேட்பாளர் அமோக வெற்றியைப் பெற்றார்.
பொது வேட்பாளருக்கு’ கிடைத்த இந்த முதல் வெற்றி, 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது இந்தியா கூட்டணியின் நம்பிக்கை. அதற்கான வியூகத்தை வகுப்பது தான் இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கம். இந்தியா கூட்டணியை எதிர்கொள்ள பாஜகவின் தேர்தல் வங்கியாக திகழும் பிரதமர் மோடியால் இம்முறை முடியுமா?
சரியான போட்டி – காத்திருப்போம்!