fbpx
Homeதலையங்கம்விமான போக்குவரத்து சேவை பாதிப்பு உணர்த்தும் பாடம்!

விமான போக்குவரத்து சேவை பாதிப்பு உணர்த்தும் பாடம்!

இண்டிகோ விமான சேவை நாடு முழுவதும் தொடர்ந்து 9-வது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட வேண்டிய 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியை பயன்படுத்தி ஏர்இந்தியா உள்ளிட்ட மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தின. அதிலும் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் அனுபவிக்கும் அவதி, பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

டிச 2 முதல் இன்றுவரை 4500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளிக்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு துறை டிசம்பர் 6-ஆம் தேதி கொடுத்த நோட்டீசிற்கு நேற்று விளக்கமளித்த இண்டிகோ, “செயல்பாட்டு அளவு பெரிது & சரியான காரணம் ஒன்றை மட்டும் காட்டுவது இப்போது சாத்தியமில்லை,” என்று சொல்லி கூடுதல் அவகாசம் கேட்டது.

இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடுகளால் அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வந்த நிலையில், முக்கிய வழித்தடங்களை இண்டிகோ நிறுவனத்திடம் இருந்து வேறு நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது.

மேலும் நாளொன்றுக்கு சுமார் 100 விமான சேவைகளைக் குறைக்கவும் அறிவுறுத்தியுளளது. மேலும் 0&500 கி.மீ க்கு ரூ.7,500 க்கு மேல் வசூலிக்கக் கூடாது, 1500கி.மீ மேல் அதிகபட்சம் ரூ.18,000 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரும் விமான பயணம் மேற்கொள்வது அதிகரித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் விமானப் போக்குவரத்து மிகவும் அத்தியாவசியமான தேவையாகிவிட்டது.

தனியார்மயம் என்ற பெயரில் தன் வசம் இருந்த ஏர் இந்தியாவையும் டாடா நிறுவனத்திடம் ஒன்றிய அரசு ஒப்படைத்து விட்டது.

தனியார்மயத்தை ஊக்குவிப்பதை முழுமையாக நிராகரிக்க முடியாது என்றாலும் முக்கிய துறைகளை அரசு தன்வசம் வைத்திருக்க வேண்டும் என்பதைத் தான் இந்த விமான பயண பாதிப்பு உணர்த்துகிறது. அரசுவசம் விமான போக்குவரத்து இருந்தால் இந்த அளவிற்கு பிரச்சனை வந்திருக்காது. வந்தாலும் ஒருசில நாட்களிலேயே தீர்வு கிடைத்திருக்கும்.

ரயில்வே போக்குவரத்தையும் தனியார்மயமாக்கும் திட்டம் இருப்பதாகக் கூட தகவல் வெளியானது. அதனை ரயில்வே தொழிலாளர் சங்கங்களும் பயணிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

முக்கிய போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை தனியார்மயம் ஆக்கவே கூடாது என்பதைத் தான் இந்த விமான போக்குவரத்து குளறுபடி சுட்டிக்காட்டுகிறது. ஒன்றிய அரசுக்கு இது ஓர் பாடம்.

விமான போக்குவரத்தை தன்வசம் மீண்டும் முழுமையாக கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே நாட்டு மக்களின் விருப்பம்!

படிக்க வேண்டும்

spot_img