விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடல் கொள்ளையர்கள் அரிவாள், கத்தி, இரும்புக் கம்பி போன்றவற்றால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் மற்றும் மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இதில் காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. கடந்த 10-ம் தேதி நள்ளிரவிலும் இதே பகுதியில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். அதனால் ஏற்பட்ட அச்சமும், பதற்றமும் விலகும் முன்பே இலங்கைக் கடல் கொள்ளையர்கள் அடுத்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவே அஞ்சுகின்றனர்.
ஒருபுறம் சிங்களக் கடற்படையினர், இன்னொருபுறம் இலங்கைக் கடல் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாவதை மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
இனியும் அமைதி காத்தால் தமிழக மீனவர்கள் மீதான கடல் கொள்ளையர்கள் மற்றும் சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் அதிகமாகி விடும். இது இந்தியாவின் இறையாண்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். உலகின் மிக பயங்கரமான கடல் கொள்ளையர்களாக கருதப்படும் சோமாலியா கடல் கொள்ளையர்களையே ஒடுக்கிய பெருமை இந்திய கடற்படைக்கு உண்டு. அவர்களுடன் ஒப்பிடும்போது இலங்கை கடல் கொள்ளையர்கள் மிகச் சாதாரணமானவர்கள். மீனவர்கள் பிரச்னை என்றால் இருநாட்டு உறவு சம்பந்தப்பட்டது என சப்பைக்கட்டு கட்டலாம்.
ஆனால் கடற்கொள்ளையர் அட்டகாசத்தை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்திய மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமது கடற்படைக்கும் கடலோரக் காவல் படைக்கும் உள்ளது.
இந்தியாவை ஒட்டிய கடல் பகுதிகளில் கைவரிசை காட்டும் கடல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 2019-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கடல் கொள்ளையர்கள் எதிர்ப்புச் சட்டம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி கடல் கொள்ளையர்களுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். எனவே, அந்த சட்டத்தின்படி இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை கூட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடந்து விடக்கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவேண்டும்.
கடற்கொள்ளையர்களை ஒடுக்காவிட்டால்… மீண்டும் அவர்கள் தாக்குதல் தொடர்ந்தால் அதைவிடக் கேவலம் என்ன இருக்க முடியும்?



