fbpx
Homeதலையங்கம்குட்கா வழக்கில் தள்ளாடும் சிபிஐ - நீதிமன்றம் குட்டு!

குட்கா வழக்கில் தள்ளாடும் சிபிஐ – நீதிமன்றம் குட்டு!

முந்தைய அதிமுக ஆட்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைப்பதாகச் செய்திகள் பரபரத்தன. அந்தச் சூழலில், குட்கா வியாபாரி மாதவ ராவ் ரூ.240 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில், வருமான வரித்துறையினர் 2016-ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, வருமான வரித்துறையினரிடம் ஒரு டைரி சிக்கியது.

அதில், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கும் ரூ.39.91 கோடி லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி.ஜி.பி-க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் கலால்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பெயர்களும் லஞ்சம் பெற்றவர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தன.

அது தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்கு பதிவுசெய்தது. பின்னர், அது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் புயலைக் கிளப்பியது.

ஆனால், சிறுவர்கள் எதிர்காலம் போதைக்கு அடிமையாகும் என்ற அச்சத்தை ஊட்டுகிற செயலாகவும் இவ்வழக்கு கருதப்பட்ட சூழலில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம் என 6 ஆண்டுகளாக விசாரணையைத் தட்டிக்கழித்து வந்தது சிபிஐ.

அதன் பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, குட்கா வழக்கை தீவிரப்படுத்தி, ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுத்தது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, அவ்வழக்கு விசாரணையை நீட்டிக்க ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் போட்டார்.

இதனையடுத்து, தி.மு.க அரசு, இவ்வழக்கிற்கு தீர்வு கிடைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதன் பிறகு வேறு வழியின்றி, ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். எனினும், அ.தி.மு.க.விற்கு சார்பான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா, “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி. வி.ரமணா மீதான சிபிஐ விசாரணை அதிருப்தி அடைய செய்கிறது” என அதிருப்தி தெரிவித்து குட்டு வைத்துள்ளார்.

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ரமணா-வை பாதுகாக்கும் விதத்தில், சிபிஐ மந்தமாக விசாரணை நடத்துகிறது என்பது தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

அப்போது அதிமுகவுடன் நெருக்கமான கூட்டணியில் பாஜக இருந்ததால் குட்கா வழக்கை நீர்த்துப் போகச்செய்யும் அனைத்து நடவடிக்கைளிலும் சிபிஐ ஈடுபட்டது. இப்போது பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதிமுக தலைவர்கள் கூறிவரும் நிலையிலும் சிபிஐ விசாரணையில் அதே தள்ளாட்டம் – போதை தலைக்கேறியவனிடம் காணப்படுவது போன்ற மந்தநிலை தொடர்கிறதே, அது ஏன்?

அதிமுக முன்னாள் அமைச்சர்களைப் பாதுகாக்க சிபிஐ துடிப்பது ஏன்? இது பாஜகவுடன் அதிமுக இன்னும் மறைமுகக் கூட்டணியில் நீடிக்கிறதோ என்ற சந்தேகத்தைத் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது!

படிக்க வேண்டும்

spot_img