fbpx
Homeதலையங்கம்சர்ச்சை ஆளுநர்களுக்கு டெல்லி கடிவாளம்!

சர்ச்சை ஆளுநர்களுக்கு டெல்லி கடிவாளம்!

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக 2019-ல் பதவி ஏற்றார் பகத்சிங் கோஷ்யாரி. அப்போது பாஜகவுக்கு எதிரான சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு அம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது. இதனால் மாநில அரசுடன் கோஷ்யாரி தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்தார்.

இதன்பின்னர் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனாலும் ஆளுநர் கோஷ்யாரி தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை கூறி வந்தார். குறிப்பாக மகாராஷ்டிரா மக்கள் போற்றி வணங்கும் சத்ரபதி சிவாஜி குறித்து கோஷ்யாரி பேசிய பேச்சு அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதாவது சிவாஜி பழைய காலத்தின் அடையாளம். அம்பேத்கரும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் புதுயுக அடையாளங்கள் என ஒப்பீடு செய்தார் கோஷ்யாரி.

பின்னர் சாணக்கியன் இல்லை என்றால் சந்திரகுப்தனை பற்றி யாருக்கு தெரிந்திருக்கும்? சமர்த் ராமதாஸ் என்ற குரு இல்லாவிட்டால் சத்ரபதி மகாராஜா பற்றி யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் என்றார் கோஷ்யாரி. இந்தப் பேச்சும் பெரும் புயலை கிளப்பி விட்டது. இதற்கு மகாராஷ்டிராவின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

அதேபோல குஜராத்திகள், ராஜஸ்தானிகள் இல்லையெனில் மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகராக இருந்திருக்காது எனவும் கோஷ்யாரி பேசி இருந்தார்.

இப்படி தொடர்ச்சியான சர்ச்சைகளில் கோஷ்யாரி சிக்குவதை டெல்லி மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்பட்டது. இதனாலேயே தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக கோஷ்யாரி இப்போது அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலும் மக்கள் உணர்வுகளுக்கு எதிராக தமிழ் மொழி, தமிழ்நாடு விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிலைப்பாடுகளுடன் தீவிரமாக கருத்துகளை தெரிவித்து வந்தார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆளுநர் ரவி தமது நிலைப்பாடுகளை தலைகீழாக மாற்றிக் கொண்டார்.

ஆளுநர்களின் இத்தகைய சர்ச்சைகள், அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதாலேயே ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசு கடிவாளம் போட்டு வருகிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் மகாராஷ்டிரா ஆளுநர் கோஷ்யாரியின் ராஜினாமா முடிவும் இதனை வெளிப்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

ஆளுநர்கள் அத்துமீறல்களை ஒன்றிய அரசு கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது வரவேற்கத் தக்கதே. ஆனால் அது தேர்தலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுத்துவதாக இருக்கக்கூடாது.

எந்தக் காலத்திலும் அது, ஒன்றிய ஆளுங்கட்சியே மாநிலங்களில் ஆண்டாலும் சரி அல்லது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் சரி… அந்தந்த மாநில அரசுகளுடன் சுமூகமான உறவில் ஆளுநர்கள் இருக்க வேண்டும்.

குடியரசுத் தலைவரிடம் முறையிட்டு, அவர் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நிலைமையை எந்த மாநில ஆளுநரும் உருவாக்கக் கூடாது.

மாநில அரசின் சட்ட மசோதாக்களுக்கு அனுமதி தராமல் காலம் தாழ்த்துவது மாநிலத்தின் வளர்ச்சிக்கே குந்தகம் விளைவிப்பதாகும். இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்து கொண்டு தன் நிலையை மேலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு ஆளுநராக இருப்பது பெரிதல்ல; தமிழ்நாட்டு மக்களின் ஆளுநராக அவர் மாற வேண்டும். மாறுவார் என்றே தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் நம்புகின்றனர்.
நல்ல மாற்றம் விரைவில் வரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img