மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து விரைவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
துணைவேந்தர் முனைவர் வை.பாரதிஹரிசங்கர் வரவேற்றார்.
வேந்தர் ச.ப.தியாகராஜன் தலைமை தாங்கி பேசும்போது, கல்விக் கொள்கையானது (NEP) 2020 அணுகல், சமபங்கு, தரம், மலிவு மற்றும் பொறுப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வாழ்நாள் முழுவதும் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கான இந்தியாவின் வழி காட்டி வெளிச்சமாக இம்முறை அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் கேட்கவும், கற்றுக்கொள்ளவும் வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். உலகம் ஒவ்வொரு நொடியும், புதிய அறிவை உருவாக்கப்போகிறது. அதனால் உங்கள் தொழிலில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பதோடு, அச்சமின்றி செயல்படுவதும் அவசியம் என்றார்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர்
பல்வேறு புலங்களில் இருந்து 2705 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
நாகரீகத்தின் பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ திருக்குறள் உதவுகிறது.
கல்வித் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ்நாடு அனைத்து வளர்ச்சிக்கும் மையமாக விளங்குகிறது.
கல்வியில் மற்ற மாநிலங் களைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு அதிகராம் வழங்கப்பட்டதால், இந்தியாவில் பெண்கள் தங்கள் முத்தி ரையை பதித்துள்ளார்கள்.
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (NCERT) சார்பில், ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய மொழிகளிலேயே இதுவரை புத்தகங்கள் வெளியிடபடுகின்றன. 2023-24-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் வெளியிடப்படும்.
அடிப்படை பாடத்தை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள் கையின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கை வாயிலாக, யு.ஜி.சி. அமைப்பை புனரமைக்க பரிந்துரைக்கப்ட்டுள்ளது.
புதிய உயர்கல்வி ஆணையம் இந்தியாவில் பல்வேறு தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கும். அனைத்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து விரைவில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். இதற்கான நிதி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கை மட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நான்கு மற்றும் மூன்றாண்டு பாடத்திட்டங்களை பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்டுகள், மாணவர்கள் சுயமாக தேர்வு செய்ய முழுமையான சுதந்திரம் அளிக்கப்படும்.
நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 27% ஆக உள்ளது. 50%ஆக உயரும் நோக்கில் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய கல்விக் கொள்கை என்பது சாதா ரண காகிதத் திட்டம் அல்ல.
மொழி முதல் ஆராய்ச்சி வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார். பதிவாளர் முனைவர் சு.கௌசல் யா நன்றி கூறினார்.