தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடந்து வருவது கண்கூடு. எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு அரசை விமர்சிப்பது என்பது ஆளுநர் வாடிக்கையாக வைத்திருக்கும் ஒன்று.
முதல்வர் ஸ்டாலினே அவரை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு மோதல் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம்&ஒழுங்கு சரியில்லாத போது அரசை எப்படி பாராட்ட முடியும் என்று கூட சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ஆளுநரை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கு கெட்டுவிட்டதாக புகார் அளித்தனர். அதனால் முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நா கூசாமல் அவர்கள் இருவரும் விடாது முழங்கி வருகின்றனர்.
இவர்கள் பேச்சைக் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி எடக்கு மடக்காக ஏதாவது செய்து விடுவாரோ என்று கூட தமிழ்நாட்டு மக்கள் அச்சம் கொண்டனர்.
அப்படி ஆளுநர் கடுமையாக நடந்து கொண்டாலும் கூட நடக்கப் போவது ஒன்றும் இல்லை. என்றாலும், இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் இப்படியெல்லாம் நினைக்க வைத்தது.
ஆனால், வழக்கமான பேச்சுக்கு நேர் எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு திடீரென பாராட்டு தெரிவித்து பேசி இருக்கிறார்.
ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த ‘கோவா தினம்‘ கொண்டாட்ட நிகழ்வில் அவர் பேசும் போது ‘பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழ்நாட்டிற்கு கல்விக்காகவும் தொழில் தொடங்குவதற்காகவும் தேடி வருகின்றனர். பிற மாநில மக்கள் தமிழ்நாட்டை தாய் மாநிலமாக கருதுகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம்‘ என்று புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தொழில் வாய்ப்புகளை ஈர்த்துத் திரும்பும் வேளையில் ஆளுநர் புகழ்ந்து உரைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம் தானே?
உண்மையை உரக்க பேசி இருப்பது வேறு யாரும் இல்லை சாட்சாத் ஆளுநர் ஆர்.என்.ரவிதான்.
இந்த நிலை தொடர வேண்டும். சுமுக உறவு நீடிக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஆசை. தமிழ்நாடு அரசுடன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இனிமேலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி நல்லுறவை பேணுவார் என நம்பி அவரை பாராட்டுவோம்!