உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாரத்தானை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆண்டுதோறும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக (World No Tobacco Day)அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் புகையிலை பயன்படுத்துவதால், புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்டவை பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் புகையிலை எதிர்ப்பு மாரத்தான் நடைபெற்றது. பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் அவிநாசி சாலை ரேஸ்கோர்ஸ் வழியாக மீண்டும் வ உ சி மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் டி.வி. குமார், புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. எம். சரண்யாதேவி, சமூகப் பணியாளர் கே.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் எம். தௌபிக், ஸ்பாட் வோர்ல்ட் வைட் கம்பெனி ஸ்தாபகர் மற்றும் சிஇஓ எம்.நிஜார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.