fbpx
Homeபிற செய்திகள்கோவையில் முதல் முறையாக இலவச நடமாடும் பேருந்து மருத்துவ கிளினிக் சேவையை துவக்கிய கொங்குநாடு மருத்துவமனை

கோவையில் முதல் முறையாக இலவச நடமாடும் பேருந்து மருத்துவ கிளினிக் சேவையை துவக்கிய கொங்குநாடு மருத்துவமனை

கோவை கொங்குநாடு மருத்துவமனை 375 படுக்கை வசதியுடன் நகரின் மையப்பகுதியில் பல்துறை மருத்துவமனையாக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனைக்கு பெருமை சேர்க்கும் விதமாக கோவையில் முதல்முறையாக கொங்குநாடு மருத்துவமனை இலவச நடமாடும் பேருந்து மருத்துவ கிளிக்கை ஏற்படுத்தி கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளியவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் மூலம் சேவையை செய்ய உள்ளது.

இதன் துவக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீனம்பாளையத்தில் அமைந்துள்ள கொங்குநாடு நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இலவச நடமாடும் பேருந்து மருத்துவ கிளினிக்கை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். இவ்விழாவிற்கு கோவை மேயர் ரங்கநாயகி முன்னிலை வகித்தார்.

கொங்குநாடு மருத்துவமனை மற்றும் கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் தலைமை அறங்காவலர் டாக்டர் பி.ராஜு வரவேற்றுப் பேசினார். கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், ஊரக மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பி.பாலுசாமி, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அ.ரவி, தாழியூர் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, நைட்டிங்கேல் கல்லூரியின் தாளாளர் மனோகரன், விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் இன்ஜினியர் ஆர்த்தி விசுவநாதன், கொங்குநாடு நர்சிங் கல்லூரியின் தலைமை அறங்காவலர் விஜயலட்சுமி ராஜு, ஒன்றிய திமுக செயலாளர் சாமி பையன் மற்றும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து துறை நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

இந்த இலவச நடமாடும் மருத்துவக் கிளினிக் பேருந்தில் டாக்டர் பரிசோதனை அறை, ரத்தப் பரிசோதனை அறை, எக்ஸ்ரே அறை, இசிஜி அறை மற்றும் மருந்தக அறை என அனைத்து வசதிகளும் ஒரே நடமாடும் பேருந்தில் குளிர்சாதன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் எல்இடி ஸ்க்ரீன் வசதி உள்ளது.

இதன் மூலம் பொது மக்களுக்கு நோய் மற்றும் அவற்றை கையாளும் முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. மேலும் பேருந்தில் வெளியே அமர்ந்து முகாம் நடத்த ஏதுவாக கூடாரம் அமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக 25 சதவீத வியாதிகளை டாக்டரின் அனுபவத்தைக் கொண்டே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். ரத்தம், சிறுநீர்,எக்ஸ்ரே, இசிஜி பரிசோதனைகள் மூலம் மேலும் 25 சதவீத நோய்களை கண்டறியலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ டெஸ்ட்கள் மூலம் மேலும் 25 சதவீத நோய்களை கண்டறியலாம். ஆக மொத்தம் 75 சதவீத நோய்களை மேற்கூறிய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

இது தொடர்பாக கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.ராஜு மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு ஆகியோர் கூறுகையில், 25 சதவீதம் பேருக்குத்தான் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பெட்ஸ் ஸ்கேன் மற்றும் கேத் லேப் எண்டோஸ்கோபி டெஸ்டுகள் தேவைப்படுகிறது.

மேற்கூறிய வசதிகளுடன் கூடிய நடமாடும் பேருந்து மருத்துவ சேவை மூலம் குக்கிராமங்கள், மலைவாழ் மக்கள் வாழும் கிராமங்கள் போன்றவற்றிற்கு மருத்துவ சேவை அளிக்க முடியும். அவர்களுடைய வாழ்வாதாரம் உடல் ஆரோக்கியம் உயரும். அதனால் பொருளாதாரம் உயரும். இந்த நடமாடும் பேருந்து சேவை மிகவும் உன்னதமான முயற்சி. கோவையில் முதல் முறையாக இந்த மருத்துவ பேருந்து கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.

இறுதியில் கொங்குநாடு மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் ராஜு நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img