சாதனை படைப்பதில் தமிழர்கள் என்றைக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு மற்றுமொரு சான்றாக தமிழ்நாட்டுப் பெண் முத்தமிழ்ச்செல்வி திகழ்கிறார்.
விருதுநகர் மாவட்டம், ஜோவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 34 வயது பெண்ணான இவர், தற்போது சென்னையில் வசிக்கிறார்.
வில்வித்தை, குதிரை சவாரி, மலைகளில் கண்களை மூடி ஏறுதல் என சிற்சில சாதனைகளை செய்த முத்தமிழ்ச்செல்வி தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறி புதியதோர் சாதனைச் சிகரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார்.
ஏப்ரல் 5ம் தேதி மலை ஏறத் தொடங்கிய இவர் மே 23ம் தேதி 29,035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்நாட்டுப் பெண் என்ற பெரும் சாதனையை படைத்துள்ளார். தமிழ்நாட்டுக்கே பெருமை தேடி தந்துள்ளார்.
வெற்றிகரமாக சாதனை செய்து திரும்பிய முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து தமிழ்நாடு அரசு கௌரவப்படுத்தி உள்ளது.
‘முயன்றால் முடியாதது ஏதுமில்லை’ என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக முத்தமிழ்ச்செல்வியின் சாதனை இருக்கிறது என்றால் மிகையாகாது.
‘ஏழு கண்டங்களின் உயரமான மலைச் சிகரங்களில் ஏற வேண்டும் என்பதே என் இலக்கு. ஒன்றை ஏறி முடித்து விட்டேன். மீதமுள்ள ஆறு கண்டங்களின் உயரமான சிகரங்களில் ஏற வேண்டும்; ஏறுவேன்’ என முத்தமிழ்ச்செல்வி முழங்கி இருக்கிறார்.
அவரது முத்தான சாதனைகள் தொடரட்டும். தமிழ்நாட்டின் சாதனைப் பெண்ணுக்கு நாமும் நம் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வோம்!