ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தமாகா, இடைத்தேர்தலில் அதிமுகவே களம் காணும் என அறிவித்துவிட்டது.
இதனை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இடைத் தேர்தலில் தங்கள் அணி போட்டியிடும் என அறிவித்துள்ளார் ஓபிஎஸ். பாஜகவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ளும் முயற்சியாக, அக்கட்சி போட்டியிட விரும்பினால் விட்டுக் கொடுப்போம் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்ஸின் இந்த அறிவிப்பால் இரட்டை இலை சின்னம் எந்த தரப்புக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. சின்னத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இருக்கும் பக்கத்துக்கு தான் ஒதுக்கப்படும் என்றும், எனவே எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகமுள்ள எடப்பாடிக்கே கிடைக்கும்
என திட்டவட்டமாக கூறுகிறது அத்தரப்பு.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ, அவருக்கே ஆதரவளிக்கப்படும் என கூட்டணி கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முறைகேடாக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடியின் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பதால், எடப்பாடி தரப்புக்கு சின்னம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
எனவே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்கப்படும்
என ஒபிஎஸ் தரப்பு கூறுகிறது. இரு தரப்பினரும் வேறுவேறு சின்னத்தில் போட்டியிட்டால் தான் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்ற விவரம் வெளியாகும் என அரசியல் நோக்கர்கள், கூறுகின்றனர்.
சின்னம் முடக்கப்பட்டு சுயேச்சைகளாக இடைத்தேர்தலில் களம் கண்டால், இது ஓபிஎஸ் தரப்புக்கே பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டாலும் இருவரும் தனியாக போட்டியிடுவதில் உறுதியாக உள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் உறுதியாக இருந்தாலும் நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர். இரு அணியிலும் வேட்பாளர் கிடைக்காமல் திணறி வருவது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் இந்த தேர்தல் குறித்து சசிகலா இதுவரை வாய் திறக்கவில்லை. அவர் இந்த தேர்தலில் தனது பங்களிப்பை காட்டாமல் உள்ளார். அதேநேரத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தானே போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பாஜக தனித்து போட்டியிடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் அண்ணாமலையும் திணறிக் கொண்டிருக்கிறார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவில் வேட்பாளர் கிடைக்காமல் திணறும் சூழ்நிலை தொண்டர்களை கவலையடையச் செய்துள்ளது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவுக்கா இந்த நிலை? ஜெயலலிதாவால் சீராட்டி வளர்க்கப்பட்ட அதிமுகவுக்கா இந்த நிலை? என தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.
எடப்பாடி அணியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த பலரும் இப்போது பின்வாங்க ஆரம்பித்து விட்டனர். அதிமுகவில் சீட் கேட்கக்கூட யாரும் முன் வரவில்லை. திமுக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு 3 நாளாகி விட்டபோதிலும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் இரு தரப்பும் வேட்பாளர்களை உடனடியாக அறிவிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டதே முதல் தோல்வி… பெரிய தோல்வி தானே-!