அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா? என்பது பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
அதிமுகவின் இந்த முடிவுக்கு 2 வகையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, அண்ணாமலை மீதான கடும் அதிருப்தி.
மற்றொன்று சிறுபான்மையினர் ஓட்டுக்கள். அதேசமயம், அதிமுக எடுத்த இந்த முடிவானது, மேலிட பாஜகவை அதிர வைத்துள்ளது. உடனடியாக அண்ணாமலையை டெல்லிக்கு வர உத்தரவிட்டது.
அத்துடன் கூட்டணி முறிவு குறித்து பாஜக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கேற்றவாறு, பாஜகவில் எந்த தலைவர்களுமே இதுகுறித்து கருத்து கூறாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
எக்காரணத்தை கொண்டும் அதிமுக கூட்டணியை இழக்க பாஜக விரும்பாது என்கிறார்கள். காரணம், வடமாநிலங்களில் கடந்த 2 வருடங்களில் நடந்து முடிந்த தேர்தல்களில் பாஜக பெரும்பாலும் தோல்வியை தழுவியது.. காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.
இதனால், தன்னுடைய கோட்டை என்று கருதக்கூடிய மாநிலங்களையே, பாஜக ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அதனால்தான், வடமாநிலங்களில் விட்டதை, தென்மாநிலங்களில் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தமிழகத்தில் இறங்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் கூட்டணி முறிவு என்ற விஷயத்தை மேலிட தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். எனினும், தேர்தலுக்குள் எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்பார்த்தபடியே, இந்த விவகாரம் தொடர்பாக, பாஜகவின் மேலிட தலைவர், அதிமுகவின் மாஜி அமைச்சர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம்.. அப்போது, “எடப்பாடி பழனிசாமியிடம் பேசுங்கள், மனக்கசப்புகளை மறந்து கூட்டணி அமைத்து செயல்படலாம்.
தேவைப்பட்டால் நானே சென்னைக்கு வருகிறேன், நேரில் உட்கார்ந்து பேசி கொள்ளலாம்“ என்றாராம். டெல்லி மேலிட தலைவரின் பேச்சை, அப்படியே எடப்பாடி பழனிசாமியிடம் கொண்டு சென்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவுடன் இனி கூட்டணியே வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று திடமாக சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகுதான், பாஜகவுடன் எப்போதுமே கூட்டணி இல்லை என்று மூத்த தலைவர் கே.பி. முனுசாமி பேட்டி கொடுத்ததாக தகவல் கசிந்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதனால் தங்களுக்கு துளியும் லாபமில்லை, சிறுபான்மையின ஓட்டுக்களை இழந்ததுதான் மிச்சம் என்பதால், இப்போது எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருக்கிறதாம் அதிமுக.
அத்துடன், பாமக, தேமுதிக கட்சிகளுடன் மேலும் கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்கவும் அதிமுக தயாராகி விட்டது. அடுத்த என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்!