அதிமுகவில் சட்ட ரீதியாக உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி இந்த நீண்ட மோதலில் ஒருவழியாக வென்றுவிட்டார். கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவு என்று எல்லாம் இருந்ததால் எடப்பாடி பழனிசாமி இதில் எளிதாக வென்றுவிட்டார்.
பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் கூறி உள்ளது. ஈரோடு கிழக்குத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு கிடைத்தது.
தொடர்ந்து, ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கொத்து கொத்தாக இபிஎஸ் அணிக்குத் தாவினர். இதெல்லாம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. வேறு வழியின்றி சசிகலா, டிடிவி.தினகரனை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.
இந்த சூழலில் வரும் மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம், “அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டப்படி செல்லாது. விண்ணப்பங்களை யாருக்கும் கொடுக்காமல் உறுப்பினர் அட்டை கொடுத்துள்ளனர்.
அரசியல் மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நாங்கள்தான் அதிமுக என மக்கள் மத்தியில் நிரூபிப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எடப்பாடி பழனிசாமி 26ம் தேதி நடைபெறும் தேர்தலில் பொதுச்செயலாளராக ஏகமனதாக வெற்றி பெறப்போவது உறுதி. எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அவர்களைப் போல எடப்பாடி பழனிசாமி மாஸ் லீடராக இல்லாவிட்டாலும் அவர் பொதுச்செயலாளர் ஆவதற்கு எந்த தடையும் இருக்காது. இதில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை. அதிமுக முழுமையாக அவரது கட்டுப்பாட்டில் வந்து விடப்போகிறது. இது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான்.
இரட்டை இலை சின்னம் கிடைத்தும் கூட்டணியில் பாஜக இருந்தும் தங்கள் கோட்டை எனக் கூறிக் கொள்ளும் கொங்கு மண்டலம் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அக்கட்சியின் வாக்கு வங்கி சரிந்ததைக் காண முடிந்தது.
இங்கேயே இப்படி என்றால் தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கு மிகக் குறைவு என்றே கணிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவியேற்ற பிறகு அதிமுகவுக்கு 2017 ஆர்கே நகர் இடைத்தேர்தல் முதல் 2023 ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் வரை 8 தோல்விகளை அவர் சந்தித்து உள்ளதாக பட்டியலிடப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் முற்றிக் கொண்டே போகிறது. நேற்று கூட அதிமுகவுடன் கூட்டணி என்றால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அண்ணாமலை வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அதிமுக எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று பலராலும் பலவாறாக கணிக்கப்படுகிறது.
அதிமுகவை முழுமையாக தன்வசப்படுத்தி இருப்பதே எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என்பதாகத் தான் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த எடப்பாடி பழனிசாமியால் முடியுமா?
எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் கனவு நனவானாலும் அதிமுக, பாஜகவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போவது என்னவோ தமிழ்நாட்டு வாக்காள பெருமக்கள் தான்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் அதற்கு முன்னோட்டமாக அமையப் போகிறது-. தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தலாகவும் அது இருக்கும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக காத்திருப்போம்!