fbpx
Homeதலையங்கம்மக்கள் உரிமையைப் பறிக்கும் தேர்தல் நன்கொடை பத்திரம்!

மக்கள் உரிமையைப் பறிக்கும் தேர்தல் நன்கொடை பத்திரம்!

அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம் கடந்த 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது.
இதன்படி, எஸ்பிஐ சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.

தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் இந்த பத்திரங்களில் வழங்குபவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது என்றும் கூறப்பட்டது.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,பி.ஆர்.கவாய், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள், ஆய்வு செய்வோம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி உச்ச நீதிமன்றத்தில் 4 பக்க மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘தேர்தல் நிதிப் பத்திரம்மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்படுபவர்களின் விவரங்களை அறிய பொது மக்களுக்கு உரிமை இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளளார். இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதன்மூலம் பொது ஒழுக்கம் வளருமா?

2014 இல்- பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வருமுன் என்ன உறுதிமொழி சொன்னார்கள்? எதிலும் வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் இருக்கும் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் நேர்முரணான வழியில் அல்லவா பாஜக அரசு வேகமாக நடைபோடுகிறது.

தற்போதுள்ள நிதிச் சட்டங்கள்படி, சாதாரணமாக ரூ.2000-த்திற்கும் மேல் எந்த அறக்கட்டளைகளாவது நன்கொடை கொடுத்தால், அவர்களுக்கு வரி விலக்கு கிடைக்காது. சொந்த உறவுகளுக்கு ரூ.2 லட்சத்திற்குமேல் ரொக்கமாக கொடுத்தால், அதை அவர் வாங்க முடியாது.

மீறி வாங்கினால், 100 சதவிகிதம் அபராதம் கட்டியாக வேண்டும்…இப்படி அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கே ஆயிரம் கட்டுப்பாடுகள் உள்ளது.
ஆனால், யார் வேண்டுமானாலும் ஒரு கோடி ரூபாய்க்கு தேர்தல் பாண்டு மூலம் கட்சி நிதி பெறலாம் என்றால், அது அரசியல் அறமா? பொது ஒழுக்கச் சிதைவைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

நமது அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே… மக்களாகிய நாம் என்று தொடங்கி, இறை யாண்மை, முழு அதிகாரம் மக்களிடம் மட்டும்தான் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறதே. அந்த மக்களுக்கு இந்தத் தகவல் பெற உரிமை இல்லை என்பது எவ்வகையில் நியாயமாகும்?

மக்கள் புரிந்துகொள்ளட்டும்!

படிக்க வேண்டும்

spot_img