fbpx
Homeதலையங்கம்போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை!

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை!

நம் நாட்டில் தற்போது போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களையும் ஐடி பணியாளர்களையும் குறிவைத்து போதை மாத்திரை, கஞ்சா போன்றவை தாராளமாக விற்பனை செய்யப்படுவது தான் வேதனை தரும் விஷயமாகும். இதில் கோவை மாநகரும் விதிவிலக்கல்ல.

இதனைத் தடுக்கும் விதமாக மாநகர காவல்துறை தொடர் நடவடிக்கை எடுத்து, அதில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைத்து வந்தாலும் தினம் தினம் கஞ்சா விற்போரும் முளைத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

பொதுவாக போதைப்பொருள் விற்பனையில் ரவுடிகள் மற்றும் அடிதடி, கொள்ளை, கொலை முயற்சி போன்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளே ஈடுபட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்கே உலை வைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சீரழிவில் சிக்கி தங்கள் படிப்பையே பாழாக்கிக் கொள்ளும் மாணவர்கள் ஏராளம்.

அவர்கள் மீதான பெற்றோர்களின் கனவுக் கோட்டை தகர்க்கப்படும்போது அவர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. ஆக, போதைப்பொருள் விற்பனையை அடியோடு தடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்காக சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் சில நாட்களுக்கு முன் தூக்கிலிடப்பட்டுள்ளார். நம் நாட்டில் தினம்தினம் எத்தனை கிலோ கஞ்சா, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படுகிறது.

எத்தனை பேர் கைதாகிறார்கள்? என்று கணக்கெடுத்தால் தினமும் 100 பேரையாவது தூக்கிலிட வேண்டும். நேற்று கூட பெங்களூரில் இருந்து கோவைக்கு மெத்தாபெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி வந்து விற்பனை செய்ததாக 7 பேர் கைதாகி உள்ளனர். அத்தனை பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஏற்கனவே கைதானவர்கள்.

சிங்கப்பூர் அளவிற்கு மரண தண்டனை அவசியமில்லை என்றாலும் நம் நாட்டிலும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.

அதுபோன்ற கடும் சட்டங்கள் அமலாகும் வரை காவல்துறையினர் தங்கள் அதிகாரத்திற்குட்பட்டு போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியாக வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்.

அது தான் இப்போதைக்கு நமக்கிருக்கும் ஒரே வழி!

படிக்க வேண்டும்

spot_img