Homeபிற செய்திகள்கற்றல் கொண்டாட்டம் திட்டம்: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கிவைத்த கடலூர் கலெக்டர்

கற்றல் கொண்டாட்டம் திட்டம்: மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கிவைத்த கடலூர் கலெக்டர்

கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க
போட்டியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.


கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் கூறுகையில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கல்வியோடு தனித்திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறை மூலம் கற்றல் கொண்டாட்டம் எனும் திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பரதம், மண்பாண்ட பயிற்சி, மற்றும் கிராமிய நடனப் பொருட்கள் உற்பத்தி பயிற்சி, ஆங்கில மொழி பேச்சுப்பயிற்சி, கலை மற்றும் ஓவியப் பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, பாடல் மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் நடத்தப்பட்டன.


இதில் மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 672 மாணவ மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், ஊராட்சி அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு 225 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


9 வயதிற்குட்பட்ட 64 மாணவர்களுக்கும், 11 வயதிற்குட்பட்ட 60 மாணவர்களுக்கும், 13 வயதுக் குட்பட்ட 67 மாணவர்களுக்கும், 17 வயதுக்குட்பட்ட 42 மாணவர்களுக்கும் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தயார் செய்யப்படுவார்கள் என்றார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், பள்ளி தாளாளர் நசியான் கிரகோரி உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img