fbpx
Homeபிற செய்திகள்உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வாட்ஸ் அப் மூலம் பரப்பாதீர்கள்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை துணை கண்காணிப்பாளர்...

உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வாட்ஸ் அப் மூலம் பரப்பாதீர்கள்- தமிழ்நாடு சிறப்பு காவல் படை துணை கண்காணிப்பாளர் பேச்சு

“எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றார் வள்ளுவர். அதற்கேற்ப வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளைக் கூட, அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியாமல் பிறருக்கு பார்வேர்ட் செய்யாதீர்கள்” என்று கோவை புதூர் – தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் துணை கண்காணிப்பாளர் ஆர்.குமார் மாணவர்களிடையே பேசினார்.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், அண்மையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளை கோவையில் நடத்தியது. சபர்பன் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 184 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய கோவை புதூர் – தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் துணை கண்காணிப்பாளர் ஆர். குமார் பேசியதாவது:

காவல் துறை பணி என்பது சற்று கடினமான பணியாக இருந்தாலும், பொதுமக்களுக்கு சேவையாற்றக் கூடிய பணியாகும். நான் இந்தப் பணியை விரும்பியே செய்கிறேன்.

என்னிடம் கலர் சட்டைகளை விட காக்கி சட்டைகள் தான் அதிகம் இருக்கின்றன. இதுவே என் ஈடுபாட்டை காட்டும். காவலர் பணியில் நாங்கள் தினந்தோறும் ஒரு திருக்குறளை சொல்லிவிட்டே பணிகளை தொடங்குகிறோம். இவ்வாறு அவர் என்றார்.

பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:


இடைநிலைப் பிரிவு: சி. கிருபா சங்கர், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
மேல்நிலைப் பிரிவு: பா. ஹரிஷினி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
கல்லூரிப் பிரிவு: மு. கவிநிலவன், பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை

ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள்:

இடைநிலைப் பிரிவு: இ. கௌசிகா, தி.அ.தி. கலாநிலையம் நடுநிலைப்பள்ளி, கோவை.
மேல்நிலைப் பிரிவு: எம்.எஸ். பிருந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி, கோவை.
கல்லூரிப் பிரிவு: சி. பிரபாகரன், செவிலியர் கல்லூரி, கோவை.

இப்போட்டியானது 12 மையங்களில் நடத்தப்படுகிறது. சென்னை தெற்கு, சென்னை வடக்கு, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுச்சேரி, மதுரை, நெல்லை, கோவை, ஈரோடு ஆகிய மையங்களில் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. இனி சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

மாணவ சமுதாயத்தினரிடையே திருக்குறளின் கருத்துக்களைப் பரப்பவும், தமிழாற்றலை வளர்க்கவும், பேச்சாற்றலைப் பெருக்கவும், கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் ஸ்ரீராம் இலக்கியக் கழகம் தமிழகம் மற்றும் புதுவையில் திருக்குறள் போட்டியினை நடத்தி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img