சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் அடுத்தடுத்து பரவியது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர்.
கொரோனா தொற்று பெருமளவு குறைந்து நிம்மதியாக இருந்து வந்த சூழலில், நம் நாட்டில் கொரோனா மீண்டும் பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 11-ம் தேதி நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 938 ஆக இருந்ததது. இது நேற்று முன்தினம் 1,970 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி கேரளாவில் கொரோனாவால் 292 பேர் பாதிக்கப்பட்டனர். 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2,041 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.
கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸால் 3 பேர் பலியான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பேருந்துகளில் பயணிப்பவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொரோனா வேகமாக பரவிய போதிலும் தமிழ்நாட்டில் அந்தப் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது.
ஆனால் மேற்கண்ட இரு மாநிலங்களில் இருந்தும் தினசரி பல்லாயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கின்றனர். ஆகவே தமிழ்நாட்டிலும் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம்.
அதற்காக தமிழ்நாடு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் மக்கள் உஷாராக இருந்து கெரோனா தொற்றில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தயாராக வேண்டும். அதற்கு ஒரே வழி முகக் கவசம் அணிவது தான்.
குறைந்தபட்சம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு செல்லும் போதாவது முக கவசம் அணிந்து எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த ஜேஎன்.1 கொரோனா வைரஸ் என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் பொதுமக்கள் அறிகுறிகள் இருப்பின் அலட்சியம் காட்டாமல் தனிமைப்படுத்தி உரிய சிகிச்சையை பெற வேண்டும்.
வரும்முன் காப்பது தானே புத்திசாலித்தனம்?



