‘வாழ்ந்து காட்டுகிற ஆசிரியர்கள் – நல்லாசிரியர்கள்’ விருதுகளை கவிஞர் கவிதாசன் வழங்கினார். மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடை பெற்றது.
கோவை சகோதயா கூட்டமைப்புப் பள்ளிகள் சார்பில், பதினேழு பள்ளிகளிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ‘நல்லாசிரியர் விருது- 2024’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்திற்குச் சிறப்பு விருந்தினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பள்ளி மாணவ மாணவியர் குறட்பாக்களால் ஆன இறைவாழ்த்துப் பாடலை இசைத்தனர். தொடர்ந்து ‘பஞ்சபூதங்கள்’ வரவேற்பு நடனம் நடைபெற்றது.
விழாவில், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கோவை சகோதயா கூட்டமைப்புப்பள்ளிகள் அமைப்பின் தலைவரும், கோவை பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளியின் முதல்வருமான கிரீஷ் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். அவர் தனது வாழ்த்துரையில் கூறியதாவது:
நாம் தற்பொழுது நல்ல நிலையில் இருப்பதற்கு நமது முன்னோர்கள், பெற்றோர்கள் முக்கிய காரணமாவார்கள். அவர்களையும் விட மிக முக் கியமானவர்கள், உங்களைப் போன்ற ஆசிரியர்கள். அதனால் தான் ‘ஆச்சார்ய தேவோ பவ’ என்றார்கள். நமது கலாச்சாரம், விருந்தினர்களை உபசரித்தல் போன்றவை முன்னோர்கள் கற்றுக்கொடுத்தவை.
ஆசிரியர்களைப் பெருமைப் படுத்துதல் என்பது மிகவும் இன்றியமையாதது. மாணவ சமுதாயத்திற்காக வாழ்கின்ற ஆசிரியர்களைப் பாராட்டுதல் என்பது உயரிய செயல். ஆசிரியர் தின விழாவையொட்டி சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பதினேழு பள்ளிகளைச் சார்ந்த சிறந்த ஆசிரியர்களுக்கு விருது கள் வழங்குவதற்கு கோவை சகோதயா கூட்டமைப்புப் பள் ளிகள் அமைப்பு பெருமை கொள்கின்றது” என்றார்.
ஆசிரியர்களுக்குச் சிறந்த ஆசிரியர் விருதிற்கான கேடயம் மற்றும், சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றிய சிந்தனைக்கவிஞர் கவிதாசன் தனது உரையில், மனிதர்கள், எதை நோக்கி ஓடுகிறார்கள் என்றால், பணத்தை நோக்கியா, புகழை நோக்கியா, பதவியை நோக்கியா என்றால், மகிழ்ச் சியை நோக்கித்தான் ஓடு கிறான் என்று ஆய்வில் கண்டறிந் திருக்கின்றார்கள்.
பணம் சம்பாதிப்பதும், பதவியைப் பெறுவதும், புகழ் பெறுவதும் என அனைத்தும் மகிழ்ச்சியடைதல் என்பதனையே நோக்கமாகக் கொண்டது. ஜென் கவிதை ஒன்றில், ‘குளிர் காய்வதற்காகச் சுள்ளி பொறுக்குகிறாய். இறுதி வரையில் நீ குளிர் காய்வதே இல்லை. பிறகு அந்தச் சுள் ளியை வைத்தே உன்னை எரித்துவிடுகிறார்கள்..’ என்று முடிகின்றது.
மகிழ்ச்சி எங்கே கிடைக்கும் என்றால், நீங்கள் செய்கிற வேலை உங்களுக்குப் பிடித் திருக்கின்றது என்றால் 60 சதவீதம் மகிழ்ச்சி. உங்களைச் சார்ந்திருப்பவர்கள், உங்களோடு இருப்பவர்களோடு இணக்கமாக இருந்தால் 30 சதவீதம் மகிழ்ச்சி. பணம் பெறுவது 10 சதவீதம் மகிழ்ச்சியைத் தரும் என்கிறார்கள்.
வழிகாட்டுகிற ஆசிரியர் களை விட வாழ்ந்து காட்டுகிற ஆசிரியர்களே நல்லாசிரியர் கள். வேலைக்கான கால்வி, தேர்வுக்கான கல்வி, வாழ்க்கைக் கான கல்வி என மூன்று கற்றல் முறை உண்டு.
படிப்பதில் அறிதல், புரிதல், சிந்தித்தல், தெளிதல், ஆகிய படிநிலைகள் உள்ளன. ஆசிரியர்கள் இவற்றை உணர்ந்து இருப்பதோடு மாணவர்களுக்கும் இந்தப் படிநிலைகள் பற்றிச் சொல்லித்தர வேண்டும்“ என்று பேசினார்.
முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரைப் பள்ளி முதல்வர் டாக்டர் இரா.உமாமகேஸ்வரி வரவேற்றார். பள்ளியின் கல்வி ஆலோசகர் டாக்டர் வெ.கணேசன் வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்வர் முனைவர் சு.சக்திவேல் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் டாக்டர் ஷீலா கிரேஸ், திலகவதி மற்றும் முனைவர் வீ.கே.கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.



