fbpx
Homeபிற செய்திகள்சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் துவங்கியதுநாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய்...

சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டம் துவங்கியதுநாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய் இழப்பு

கோவையில் சிறு மற்றும் நடுத்தர நூற்பாலைத் தொழில் பெறும் நஷ்டத்திற்கு உள்ளான காரணத்தினால் இன்று முதல் நூல் உற்பத்தி நிறுத்தம் மற்றும் நூல் விற்பனை நிறுத்தம் போராட்டம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகளின் கூட்டமைப்பு (சிஸ்பா) கெளரவ செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் நூற்பாலை தொழில் பல மாதங்களாக வரலாறு காணாத நஷ்டத்தை சந்தித்து வருகிறது கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக நூல் மட்டும் துணி வகைகளின் ஏற்றுமதி சுமார் 28 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இன்றைய பஞ்சு விலை கண்டி ஒன்றுக்கு 356 கிலோ விதம் ரூபாய் 58 ஆயிரமாக உள்ளது. 40-ஆம் நம்பர் நூல் விலை ஒரு கிலோவிற்கு ரூபாய் 235 ஆக உள்ளது. சுத்தமான பருத்தி ஒரு கிலோவிற்கு ரூ.194 ஆக உள்ளது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்சம் பஞ்சில் இருந்து நூல் மாற்றத்திற்கான விலை ஒரு கிலோவிற்கு ரூ.2 ஆக இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்திற்கான விலை ரூபாய் ஒன்று மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் கிலோவிற்கு ரூபாய் 40 வரை நஷ்டம் ஏற்படுகிறது. சுமார் 10,000 கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில் 2500 கிலோ நூல் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. 


இதன் காரணமாக வங்கி கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜிஎஸ்டி, இஎஸ்ஐ, பிஎப் போன்றவை செலவினங்களை செலுத்த முடியாமல் ஆலைகள் தத்தளித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் நூற்பாலைகள் விரைவில் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்படும். நூற்பாலைகளை காப்பாற்ற மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு 7.5 சதவீதம் அளவிற்கு குறைத்து கொடுக்க வேண்டும். ஜவுளி நூற்புத் தொழிலுக்கு ஒரே நாடு ஒரே கொள்கையை மத்திய அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.  நூல் மட்டும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அந்நிய நூல் மற்றும் துணி வகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதி ஆவது கண்காணித்து தடுக்க மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 கடந்த 2022 ஆம் ஆண்டு உயர்த்திய மின்சார கட்டணத்தை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தற்போதுள்ள மேக்சிமம் டிமாண்ட் கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. நூற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையிலையை கருத்தில் கொண்டு உபயோகப்படுத்தும் மின்சார பயன்பாட்டிற்கு ஏற்ப மேக்சிமம் டிமாண்ட் கட்டணத்தை, ரெக்கார்டர் டிமாண்ட் கட்டணமாக வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று பல்வேறு கோரிக்கைகள் மத்திய மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எங்களது கோரிக்கைகளை மத்திய,  மாநில அரசுகள் பரிசலீத்து நூற்பாலை தொழிலை மீட்டெடுக்குமாறு  வேண்டிக்கொள்கிறோம். 

இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தம். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.85 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img