கோவை – மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பகுதியில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் காந்திஜி சாலையில் ரூ.70.70 லட்சம் மதிப்பீட்டில் 1.17 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் ரூ.166.8 லட்சம் மதிப்பீட்டில் 3.41 கி.மீ. தொலைவிற்கு 6 தார் சாலைப்பணிகள் அமைக்கப்படவுள்ள இடங்களில் சக்தி நகர் பகுதியை பார்வையிட்டார். பின்னர் 10,11,19,21 வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.199 லட்சம் மதிப்பீட்டில் 2.6 கி.மீ. தொலைவிற்கு தார் சாலைப்பணிகள் அமைக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நட்சத்திரா கார்டன் பகுதியில் பில்லூர் குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணியை விரைவாக செய்து முடித்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.இந்த ஆய்வுகளின்போது வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர்கள் சேகர், மோகனசுந்தரி, செயற்பொறியாளர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.