fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 563 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க நடவடிக்கை -கோவை மாநகராட்சி கமிஷனர்

கோவையில் 563 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க நடவடிக்கை -கோவை மாநகராட்சி கமிஷனர்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் சேதமடைந்த சாலைகள் தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.26 கோடியில் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 2-ம் கட்டத்தில் ரூ.19 கோடியே 84 லட்சத்தில் 29 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 


கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த திட்டம், மாநில நிதிக்குழு சிறப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாநகராட்சியில் ரூ.260 கோடியில் 563 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 296 இடங்களில் சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு உள்ளது. 382 இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்கிறது. 


மீதம் உள்ள இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது ஒவ்வொரு வார்டிலும் எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்குள் சாலைகள் உள்ளன, அதில் சீரமைக்கப்பட்ட சாலைகள், சீரமைக்கப்பட வேண்டிய சாலைகள் உள்ளிட்டவை குறித்த வரைபடங்கள் ஒவ்வாரு வார்டு வாரியாக தயார் செய்யப்பட்டு வருகிறது.
கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.

கோவை உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளக்கரைகளில் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழையை கருத்தில் கொண்டு வரும் 24-ம் தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மாநகராட்சி சார்பில் காலை 8 மணி முதல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுதவிர கணபதி, பீளமேடு உள்ளிட்ட இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளும் நடத்தப்பட்டு வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img