தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு – அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே அறிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சத்து, 71 ஆயிரத்து 113 குடும்பங்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இத்துடன் ஆயிரம் ரூபாய் பணமும் தரப்பட்டது.
இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் ஈழத் தமிழர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகையை வழங்க உத்தரவிட்டார் முதல்வர்.
மேலும் 1 கோடியே 77 லட்சம் வேட்டிகளும், 1 கோடியே 77 லட்சம் சேலைகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக மட்டும் 2,436.19 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதும் பொங்கலுக்கு அண்ணன் சீர் வழங்குவது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளத்தோடு… கடமை உணர்வோடு எடுத்த முடிவு தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பாராட்டையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர்தான் மிகப்பெரிய இரண்டு இயற்கைப் பேரிடரை தமிழ்நாடு சந்தித்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – 6 ஆயிரம் ரூபாயை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
ஒன்றிய அரசிடம் ரூபாய் 37,907.19 கோடி நிவாரணத் தொகை கேட்டு தமிழ்நாடு அரசு கோரிக்கைக்கு மேல் கோரிக்கை வைத்து வருகிறதே தவிர, ஒன்றிய அரசிடம் இருந்து வழக்கமாக தரவேண்டிய பாக்கியான ரூபாய் 900 கோடியை தந்தார்களே தவிர சிறப்பு நிதி எதுவும் தரவில்லை.
ஒன்றிய அரசிடம் இருந்து பணம் வரும் நாளைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் – மக்களுக்குப் பணத்தை வாரி வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“உங்கள் வீட்டுக்கு விளக்காவேன்.
நாட்டுக்குத் தொண்டனாவேன்.மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன். மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாவேன்!” – என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு சொன்னார். அதனைத் தான் இப்போது செய்து வருகிறார்.
தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் பொங்கல் திருநாளில் ‘மகிழ்ச்சி’யைப் பொங்க வைத்து மகிழ்ந்திருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாழ்க! வாழ்க! என வாழ்த்துவோம்!