அண்ணாவின் பிறந்த நாளையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்‘ மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் முதற்கட்டமாக 1545 பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றே கால் லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.
மேலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்திய 85% பள்ளிகளில் பிள்ளைகளின் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்தது. மேலும் இத்திட்டத்தினை மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் பரவலாக ஆதரித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இத்திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும் என அரசு அறிவித்தது. அதாவது 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இன்றுகாலை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட ‘காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்து தனது கனவுத்திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்.
பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவைப் பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ருசி பார்த்து அதன் தரத்தைச் சோதித்து வருகின்றனர். அப்போது பலரும் உணவின் தரம் மற்றும் சுவை சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினர்.
அரசு பிள்ளைகளுக்காக வழங்கும் இந்தக் காலை சாப்பாட்டில் உணவின் அளவு 150 முதல் 200 கிராமம் அளவுக்கு இருக்கிறது. 293.40 அளவு கலோரி உள்ளது. புரதச்சத்து 9.85 கிராம் உள்ளது. கொழுப்புச்சத்து 5.91 கிராம், இரும்புச்சத்து 1.64 கிராம், கால்சியம் 20.41 கிராம் உள்ளது.
பெரும்பாலும் அரசு ஆரம்பப்பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் கூலித் தொழில் செய்து வருகின்றனர். வெளியூரில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். விவசாயம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.
100 நாள் வேலைக்குப் போகின்றவர்கள், தூய்மைப்பணியாளர்கள் இருக்கிறார்கள். வீட்டு வேலைக்கு போகிறவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள்கூட இருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெற்றோரின் பிள்ளைகள்தான் அரசு ஆரம்பப் பள்ளிகளில் அதிகம் படிக்கிறார்கள். வருமானம் மிகமிகக் குறைவு. வறுமையான பின்னணிக் கொண்டவர்கள். இவர்களில் பலரும் காலையிலேயே பணிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.
அவர்களின் குழந்தைகளுக்கு சத்தான உணவு என்பது எல்லாம் அப்புறம். முதலில் காலை உணவே இருக்காது. அதனால் காலை வரும்போதே சோர்ந்துபோய் தான் பள்ளிக்கு வருவார்கள். உற்சாகமே இருக்காது.
என்றைக்கு முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்
ஆரம்பிக்கப்பட்டதோ, அன்று முதல் குழந்தைகள் காலையில் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதனால் வருகைப்பதிவு உயர்ந்துள்ளது. நல்ல சுவையான சாப்பாடு என்பதால் சுவைத்து உண்கிறார்கள்.
வீட்டில்கூட காலை வேளைகளில் ஒரே மாதிரியான உணவுதான் கிடைக்கும். ஆனால், பள்ளியில் தினம் தினம் விதவிதமான உணவுகள் கிடக்கின்றன. நிம்மதியான சாப்பாட்டை உண்டவுடன் உற்சாகமாக உட்கார்ந்து பாடம் கேட்கிறார்கள்.
அந்த முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காண முடிகிறது.
இந்தக் காலை உணவுத்திட்டத்தால், தங்களின் பெரிய சுமை குறைந்துள்ளதாகவும் காலையில் பரிமாறப்படும் சுவையான உணவுகளால் பிள்ளைகள் உற்சாகமாகச் சாப்பிடுகிறார்கள் என்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
100 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றி நடை போடுகிறது இந்த திராவிட மாடல் திட்டம். முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகமே நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது.
அந்தளவுக்கு இது பயனுள்ள திட்டம்!