கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளுக்கான இயல்பை மீறி கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தன்னந் தனியே ஊருக்குள் உலா வந்தபடி உள்ளது ஒரு ஒற்றை ஆண் காட்டுயானை. இதன் பிரமாண்ட உருவம் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படும் இந்த யானை மனிதர்களை தாக்க முற்படுவதில்லை என்ற போதிலும் தினசரி இரவானால் கல்லார், ஊமப்பாளையம், சமயபுரம், தாசம்பாளையம் என ஏதேனும் ஒரு ஊருக்குள் புகுந்து கரும்பு, வாழை, பாக்கு என விவசாய பயிர்களை உண்டு விட்டு விடிந்தவுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு திரும்புவது வழக்கமாகி விட்டது.
இதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. இந்நிலையில், நேற்று மாலை கல்லார் பகுதியில் உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலைரயில் கடந்து செல்லும் தண்டவாள பாதையில் நடந்து சென்ற பாகுபலி யானை பின்னர் அருகில் உள்ள புதர் காட்டுக்குள் சென்றது. நல்வாய்ப்பாக யானை கடந்த சில நிமிடங்களில் உதகையில் இருந்து மேட்டுப் பாளையம் வந்த மலைரயில் அவ்வழியே கடந்து சென்றது.
இதன் பின்னர் மலைரயில் கடந்து சென்ற பின்னர் இருள் சூழ்ந்த பின் அங்கிருந்து வெளியேறிய பாகுபலி அங்கிருந்த ஒரு தனி யார் பள்ளி வளாகம் வழியே மெதுவாக நடந்து சென்று மீண்டும் மலைரயில் இருப்பு பாதை வழியே நடந்து சென்றது. சற்று தூரம் ரயில் பாதையில் நடந்த யானை பின்னர் தண்டவாளத்தை கடந்து அருகில் உள்ள பாக்கு தோப்புகள் நிறைந்த கல்லார் ஊருக்குள் சென்றது.
பாகுபலி யானை ரயில் பாதை வழியே பயணிப்பதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரும் முன்பே இரு ளில் சென்று மறைந்து விட்டது. ஒரு நாள் போக்குவரத்து நிறைந்த ஊட்டி&-மேட்டுப்பாளையம் சாலையில் நடப்பது, அடுத்த நாள் குடியிருப்புகள் நிறைந்த வீதிகள் வழியே உலா வருவது என பாகுபலியின் நடமாட்டத்தை கணிக்க இயலாமல் தவித்து வரும் வனத்துறையினர் தினசரி எங்கு இந்த யானை திடீரென காட்சியளிக்கும் என தெரி யாமல் திண்டாடுகின்றனர்.
நேற்று மலைரயில் பாதையில் உலா வரத்துவங்கியுள்ளதால் அதன் நடமாட்டத்தை பல குழுக்களாக பிரிந்து கண்காணிக்க துவங்கியுள்ளனர். பாகுபலி யானையை கண்டால் அதனை விரட்ட முயற்சிக்காமல் வனத்துறைக்கு தக வல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.