இலங்கையை எப்போதும் தமது பிடியில் இந்தியா வைத்திருந்து ஒரு காலம். பின்னர் அத்தனையும் தலைகீழாகிப் போனது. இதனால் இலங்கையில் எளிதாக சீனா உள்ளே நுழைந்து இந்தியாவுக்கு இன்று பேராபத்தாக நிற்கிறது.
இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மிகப் பிரம்மாண்ட கடற்படை தளம் ஒன்றை சீனா அமைக்கப் போவதாக அண்மையில் அமெரிக்கா ஆய்வு நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம் அமையப் போகிறது என்பதும் அதன் எச்சரிக்கைகளில் ஒன்று.
என்னதான் இலங்கைக்கு பெருமளவு நிதி உதவியை இந்திய அரசு வழங்கினாலும் இலங்கை அரசாங்கமானது சீனாவுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்தே வருகிறது. இது இந்திய அரசுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
இந்தியாவுடன் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இலங்கை அரசு அதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை என்பதும் மற்றொரு அதிருப்தி.
இந்தப் பின்னணியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங், இந்தியா- & இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல இந்தியா- இலங்கை இடையேயான பாலம் அமைப்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார்.
இலங்கை தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை மேம்பாட்டுக்காக அண்மையில் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நிலைமையையும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய இருக்கிறார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் மேற்கொள்ளும் நிலையில் சீனா, ஷி யான் &- 6 என்ற பிரமாண்ட ஆய்வுக் கப்பலை (உளவுக் கப்பல்) இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது.
நீரியல் ஆய்வு என்ற பெயரில் இந்த ஆய்வுக் கப்பல், இலங்கையில் நுழைவதற்கு ஜனாதிபதி ரணில் ஒப்புதல் தந்துள்ளார்.
இந்தியாவை கண்காணிக்க இலங்கைக்கு ஏற்கனவே சீனா, உளவு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளும் நிலையில், சீனாவின் உளவு கப்பலை உள்ளே நுழைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அனுமதி அளித்திருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆட்சியைத் துறந்து தப்பியோடும் அளவிற்கு இலங்கையில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இந்தியாவிடம் பெருமளவில் பணஉதவியைப் பெற்று தற்போது அங்கு சகஜ நிலை திரும்பி உள்ளது. இதற்கு காரணமே இந்தியா தான் என அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
ஆனால் தற்போது இந்தியா அதிருப்தி அடையும் வகையில் சீன உளவுக் கப்பலுக்கு வெண்சாமரம் வீசி வரவேற்பது இலங்கை அரசின் இரட்டை வேடத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது என்பதே உண்மை!