fbpx
Homeபிற செய்திகள்139 கிராம பஞ்சாயத்துகளில் பயன் பெற்றோர் 46,065 பேர் நாமக்கல் விவசாயிகள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

139 கிராம பஞ்சாயத்துகளில் பயன் பெற்றோர் 46,065 பேர் நாமக்கல் விவசாயிகள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 139 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.201.77 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 46,065 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்’ (திருக்குறள்)
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர் ஏனென்றால் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. (கலைஞர் உரை)
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 70% மக்களுக்கு வேளாண்மை தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வேளாண்மையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறு மாற்றமும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய மின்னணு முறைகளும் வேளாண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் ஏழு அம்ச தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான ‘மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி’ என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் கிராம அளவில் தன்னிறைவு மற்றும் ஒட்டு மொத்த வளர்ச்சியை பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்ததப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல் மின் இணைப்பு மற்றும் சூரியசக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் செய்து சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பான உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல், கால்நடைகளின் நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல் போன்ற அனைத்து துறை திட்டங்களும் ஒன்றிணைக்கப்பட்டு கிராமத்தின் ஒட்டு மொத்த தன்னிறைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2021-&2022 &ம் ஆண்டில் 54 கிராம பஞ்சாயத்துகளிலும், 2022-23 -ம் ஆண்டில் 85 கிராம பஞ்சாயத்துகளிலும் என கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 139 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.201.77 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு 46,065 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

வேளாண்மை துறையின் பிற திட்டங்கள் ரூ.1523.96 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் ரூ.148.221 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு 29,986 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தோட்டக்கலைத்துறையின் பிறதிட்டங்கள் ரூ.1312.95 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை பொறியியல் துறையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டங்கள் ரூ.105.30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு 176 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். வேளாண்மை பொறியியல் துறையின் பிற திட்டங்கள் ரூ.179.720 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் 3 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சர்க்கரைத் துறை மூலம் ரூ.3.34 லட்சம் மதிப்பீட்டில் பருசீவல் நாற்றுகள் மற்றும் ஒரு பருவிதைக் கரணைகள் விநியோகம் செய்யப்பட்டு 59 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் துறையின் மூலம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையாக ரூ.4189.44 லட்சம் வழங்கப்பட்டு 51,891 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். எரிசக்தித்துறை மூலம் 896 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் கூட்டுறவுத்துறையின் கீழ் ரூ.18373.5 லட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டு 20,628 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் கால்நடை முகாம்கள் ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் நடத்தப்பட்டு 12,615 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ரூ.966 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் ரூ.350.7 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டு 932 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் மல்பெரி நடவு மானியம் புழுவளர்ப்புமனை, புழுவளர்ப்பு தளவாடங்கள் ரூ.110.414 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு 237 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22 -ம் ஆண்டு வேளாண்மை துறையின் மூலம் நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஊனந்தாங்கல் மலைப்பகுதியில் பழங்குடியின விவசாயிகளைக் கொண்ட தரிசு நிலத்தொகுப்பு உருவாக்கப்பட்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறைசார்பாக 312 செந்தூரம் ரக மாங்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வேளாண்மை துறையின் மூலம் கபிலர்மலை வட்டாரத்தில் பிலிக்கல்பாளையம் கிராமத்தில் தரிசு நிலதொகுப்பு உருவாக்கப்பட்டு வேளாண் பொறியியல் துறை மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையின் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் 2023-24 -ம் ஆண்டில் 65 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. தேர்வு செய்யப்பட்டு கிராமங்களில் தன்னிறைவு அடைந்திடும் வகையில் அனைத்து துறை திட்டங்களும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

‘பொருளாதார ரீதியாக பலன்’
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை வட்டாரம், வடகரையாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாதவன் தெரிவித்ததாவது:

காளான் வளர்ப்பில் ஆர்வம் இருந்த நிலையிலும் சரியான பொருளாதார வசதி இல்லாததால் வளர்ப்பு குடில் அமைத்து உற்பத்தி செய்ய இயலாத நிலை இருந்தது. அந்நிலையில் தோட்டக்கலைத் துறையின் மூலம் காளான் வளர்ப்பு குடில் அமைக்க மானியம் கிடைப்பது பற்றி தெரிந்துக் கொண்டேன். கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (2022-23) -ன் கீழ் காளான் வளர்ப்பு குடில் அமைத்தல் பற்றியும் அதற்கு பின்னேற்பு மானியமாக ரூ.1,00,000/- வழங்கப்படுவது பற்றியும் எடுத்துரைத்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி பெற்ற பின்பு தோட்டக்கலைத் துறையின் வழிகாட்டுதலின்படி 600 ச.அடியில் ஒரு காளான் வளர்ப்பு குடிலை எனது சொந்த செலவில் அமைத்துக் கொண்டேன். அரசு மானியமாக ரூ.1,00,000/- பெற்றுக்கொண்டேன். அதனை மூலதனமாக வைத்துக் கொண்டு காளான் வளர்ப்பை தொடங்கினேன். தற்போது அரசு மானியத்தில் இந்த காளான் வளர்ப்பு குடில் அமைத்து உற்பத்தி செய்வது பொருளாதார ரீதியாக மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இத்திட்டத்தினை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி என்றார்.
‘மானியத்தில் தென்னங்கன்றுகள்’
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப் பேட்டை வட்டாரம் கொளக்கமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் தெரிவித்ததாவது:

கொளக்கமேடு கிராமத்தில் 0.75 எக்டர் விவசாய நிலம் உள்ளது. பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவன். வேளாண்மைத்துறை மூலம் 2021&-22-ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமத்தில் கடந்த 10 வருடங்களாக தரிசாக கிடந்த நிலங்களை கொண்ட விவசாயிகளை ஒருங்கிணைத்து ஊனந்தாங்கல் தரிசு நிலத்தொகுப்பு குழு உருவாக்கப்பட்டது. இதில் என்னுடைய நிலமான 0.75 நிலம் தரிசாகவும் சென்றுவர பாதை இல்லாமலும் இருந்தது.

தற்போது இக்குழுவிற்கு வேளாண்மைத்துறையின் மூலம் 4.98 எக்டருக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்ததில் என்னுடைய நிலமான 0.75 எக்டருக்கும் நீர் ஆதாரம் பெறப்பட்டது. 13 மின்கம்பங்கள் மேட்டுப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது மிகச்சிறப்பானது. தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கிய 117 செந்தூரா மாங்கன்றுகள் நடப்பட்டன. இப்போது என்னுடைய நிலத்திற்கு சென்று வர பாதையும் கிடைத்துள்ளது. இம்மரக்கன்றுகள் 4,-5 வருடங்களில் எனக்கும் என்னுடைய குடும்பத்தாருக்கும் நல்ல பயன்களை கொடுக்கும் என்று நம்புகிறேன். இத்திட்டத்தின் கீழ் தார்பாய், வேளாண் கருவிகள் போன்ற பயனுள்ள இடுபொருட்கள் மானியத்தில் கிடைக்கப்பெற்றன. 3 நெட்டை தென்னங்கன்றுகள் முழு மானியத்தில் கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் என்னை பயனடைய செய்த முதல்வருக்கு நன்றி என்றார்.

தொகுப்பு:
தே.ராம்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
த.வடிவேல்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி).

படிக்க வேண்டும்

spot_img