fbpx
Homeதலையங்கம்சென்னை போலீசின் சபாஷ் நடவடிக்கை!

சென்னை போலீசின் சபாஷ் நடவடிக்கை!

சில மாதங்களுக்கு முன்பு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அது கடந்த 2021ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையாகும்.

அந்த அறிக்கையில், சென்னை பெருநகரம்தான் முதலிடத்தை பிடித்திருந்தது. அதிவேகமாக வாகனத்தை இயக்குவதிலும் சென்னைதான் முதலிடம் என்ற வேதனைத் தகவலை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இதற்கு பிறகு, தமிழக அரசு எடுத்த பல்வேறு துரித மற்றும் கண்டிப்பு நடவடிக்கைகளினால், இந்த விபத்துக்கள் குறைய ஆரம்பித்துள்ளன. இதன் அடுத்தகட்ட முன்னெடுப்பைதான், தற்போது சென்னை மாநகர போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

அதாவது சென்னையில், இனிமேல் 40 கி.மீ வேகத்திற்கு மேல் வாகனம் இயக்கினால் வழக்கு பதியப்படும் என்று புதிய உத்தரவு, வாகன ஓட்டிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய மேலும் 20 இடங்களில் கண்காணிப்பு கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விபத்துகளை குறைக்க மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற கட்டுப்பாடு அவசியம் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் அறிவித்திருக்கிறார்.

விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை, கண்டுபிடித்து அபராதம் விதிக்க 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை அமல்படுத்தியிருக்கிறது.

அந்த ரோந்து வாகனங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள், ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ட்ரிபில் ரைட், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் அப்பட்டமாக படம்பிடிக்கிறது.

இதற்கு நல்ல பலனும் கிடைத்திருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள்.
இத்தகைய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், வாகன ஓட்டிகள் கவனமாக கடைபிடித்தால் விபத்துக்கள் மேலும் குறையும் என்பதில் ஐயமில்லை.

என்ன தான் காவல்துறை தன் கண்டிப்பை காட்டினாலும் வாகன ஓட்டுநர்கள் தாங்களே முன்வந்து போக்குவரத்து விதிகளை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டியதும் மிகமிக அவசியம்.

இந்த திட்டம் சென்னையில் வெற்றிகரமாக அமலானால் அதனைப் பின்பற்றி கோவை, மதுரை உள்ளிட்ட போக்குவரத்து அதிகம் இருக்கும் மாநகரங்களுக்கும் விரிவுப்படுத்தி விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

சென்னை போலீசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சபாஷ் கூறி வரவேற்போம்!

படிக்க வேண்டும்

spot_img