இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணத்தை மேற் கொண்டுள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். மாலத்தீவுகளுக்கான பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இலங்கை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அமைச்சர்களை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் கொழும்பில் திருப்திகரமான ஒருசந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் உட்கட்டமைப்பு, தொடர்புகள், எரிசக்தி,தொழில்துறை மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களில் இந்தியா- & இலங்கை இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது, என்றார்.
இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதே முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதுகுறித்து இரு தரப்பினரும் விவாதித்து, நிரந்தர தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் மறக்காமல் பேசி இருப்பார், பேசுவார் என்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையை முன்னெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீனவர்களின் மனதை குளிரச்செய்வாரா, ஜெய்சங்கர்?