fbpx
Homeபிற செய்திகள்மத்திய அரசின் திட்டமும் தமிழ்நாடு அரசின் திட்டமும்!

மத்திய அரசின் திட்டமும் தமிழ்நாடு அரசின் திட்டமும்!

தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கலைஞர் கைவினைத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த திட்டம் குடும்பத் தொழில் அடிப்படையில் அல்லாமல், 25 வகையான கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலைத் தொடங்குவதற்கும், செய்யும் தொழிலை நவீன வடிவில் விரிவாக்கம் செய்திடவும் கடன் உதவிகளும், திறன்மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்.

கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.3 லட்சம் கடனுதவியும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்ச வயது 35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 கைவினைஞர்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்று என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எது தான் உண்மை? இதன் மூலம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டமும், தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்றா? என்ற கேள்வியை அவர் எழுப்பி உள்ளார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய உள்ள விதிகளில் “குடும்ப அடிப்படையிலான பாரம்பரிய தொழில் செய்திருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதே வேளையில் விண்ணப்பிக்கும் முன்பே அத்தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்” என்று உள்ளது.

மேலும், அடிப்படை பயிற்சியும், உயர்நிலை பயிற்சியும் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்குதல், கடன் உதவிகளை வழங்குதல் ஆகியவையே இத்திட்டத்தின் செயல்பாடுகள்.

இது, தங்கள் குடும்பத் தொழிலில் 18 வயதிருக்கு முன்பே ஈடுபடத் தூண்டும் வகையில் உள்ளது என்றும் மாணவர்களை உயர்கல்வி கற்கும் ஆர்வத்தைக் குறைத்து குலத் தொழிலில் தள்ளும் ஆபத்து உள்ளது என்றும் கூறி, அத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணையவில்லை.

குலத்தொழில் ஊக்குவிப்பாக இல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி கனவைச் சிதைக்காமல் அதே நேரத்தில் இவ்வகை தொழில் ஈடுபடுவோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் வேண்டும் என ‘கலைஞர் கைவினைத் திட்டம்‘ முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத்தப்படுகிறது.

இதில் இணைவதற்கான வயது குறைந்தபட்ச வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப / வகுப்பு அடிப்படையில் அல்லாமல் 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் , வகுப்பு அடிப்படையில் எனச் சுருங்காமல், தொழில் ஈடுபடுவோருக்கு மட்டும் உதவும் வகையில் தமிழ்நாடு அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி அனைவருக்கும் கடன் மற்றும் பயிற்சி உதவிகளை வழங்குகிறது.

குலத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசின் திட்டம் உள்ளது. சமூக நீதி அடிப்படையில் அனைத்து தரப்பினரும் தொழில் தொடங்க ஊக்கப்படுத்துவதாக தமிழ்நாடு அரசின் திட்டம் உள்ளது.

இது மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதனைப் புரிந்து கொள்ளாமல் பலரும் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்பதே உண்மை.

இரண்டுக்கும் இடையேயான மலைக்கும் மடுவுக்குமான மாபெரும் வித்தியாசத்தை புரிந்து கொண்டால் எந்த திட்டத்தின் மூலம் சமூக நீதி நிலைநிறுத்தப்படும் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்!

படிக்க வேண்டும்

spot_img