2023 ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி சாமானியர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் காத்திருக்கின்றனர்.
அதில் தங்களுக்கான ஏதேனும் சலுகைகள், வரிவிலக்கு உள்ளிட்ட ஏதேனும் நிவாரணம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த வருட பட்ஜெட் தான் தற்போதைய ஆளும் பாஜக அரசின் கடைசி பெரிய பட்ஜெட் ஆகும்.
இதற்கு அடுத்ததாக 2024ஆம் ஆண்டு தேர்தல் வர உள்ளதால், அப்போது சிறிய பட்ஜெட் மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆதலால், இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக இருக்கிறது.
கொரோனா காலத்தில் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தது என்றால் அது சிறு குறு நிறுவனங்கள் தான். முக்கியமாக ஜிஎஸ்டி வரி, மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்டவை இவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
நாட்டின் மொத்த ஜிடிபி வளர்ச்சியில் 30 சதவீதம் சிறுகுறு நிறுவனங்களின் பங்கு இருக்கிறது. மிக முக்கியமாக வேலைவாய்ப்பில் பெரும் பங்கு சிறுகுறு நிறுவனங்களுக்கு தான் இருக்கிறது.
சிறு குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையுமென்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் ஏற்றுமதி வரிகளில் சலுகை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அயல்நாட்டு பொருட்கள் குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பொருள்களுக்கு இங்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்துவதால், உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், அரசுக்கும் அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.
அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அதிகரிக்கும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் சிறு குறு நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
அதேபோல மகளிர் குழுக்கள் மூலம் மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு எளிதாக கடன் உதவி கிடைக்கும் வகையில் சலுகைகளையும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது வேலைவாய்ப்பு. அடுத்த வருடம் தேர்தல் என்பதால் இதற்கு மத்திய பட்ஜெட்டில் முக்கிய கவனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பட்ஜெட் முக்கிய பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி பாதுகாப்பு, ஏற்றுமதி உள்ளிட்ட வணிகங்களுக்கு முக்கிய சலுகைகள் அளிக்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம் எனவும் பலர் எதிர்பார்த்து ஒன்றிய பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை ஈடுகட்டுவாரா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?