இலங்கையில் கடந்த 2009 மே மாதம் நடந்த உச்சக்கட்ட போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவர் சுடப்பட்டு சடலமாக கிடப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டது.
இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், இலங்கை இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்படவில்லை.
தற்போதும் உயிருடன் நலமுடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினரும் நலமாக உள்ளனர். பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். அவர் அனுமதியுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்
என்று தெரிவித்தார்.
மேலும் சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பி இருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழப் போராளி வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது
என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாட்டு தலைவர்கள் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்த கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வைகோ, சீமான், முத்தரசன் உள்ளிட்ட அனைவருமே, சந்தேகமாக இருந்தாலும் பிரபாகரன் உயிருடன் வந்தால் மகிழ்ச்சியே
என தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லி இருப்பவர் அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த தமிழகத்தின் மூத்த தலைவராக அறியப்படும் பழ.நெடுமாறன். அவர் இப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அவரது கூற்றை முற்றிலும் புறந்தள்ளி விடமுடியாது என்றே தோன்றுகிறது.
இந்த விவகாரம் ஒன்றிய, மாநில அரசுகளின் உளவுப்பிரிவினரையும் உசுப்பி விட்டிருக்கிறது. தொடர்ந்து, பிரபாகரன் தொடர்பான தகவல்களை அவர்கள் மீண்டும் திரட்டி வருகின்றனர்.
இதுகுறித்து நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக க்யூ பிரிவு போலீஸாரும் திரட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். பிரபாகரன் மரணமடைந்ததாக ஏற்கெனவே திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பகிரங்கமாக பழ.நெடுமாறனால் எப்படி கூற முடிந்தது? புரியாத புதிராக தமிழ்நாட்டு மக்களும் குழப்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதாரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
போட்ட முடிச்சை பழ.நெடுமாறனே அவிழ்க்க வேண்டும், ஆதாரங்களை வெளியிட வேண்டும். அல்லது உளவுத்துறை விசாரித்து முடிவை தெளிவுபடுத்த வேண்டும்.
பிரபாகரன் போரில் மரணம் அடைந்தாரா? உயிரோடு இருக்கிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!