நடந்து முடிந்திருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் 66 இடங்களையே அக்கட்சியால் பெற முடிந்திருக்கிறது.
பா.ஜ.க. அடைந்த இந்தத் தோல்வியின் மூலம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அந்தக் கட்சி ஆட்சியில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
“திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” என்று வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சமூக வலைதளங்களிலும் பலரும் இதே போன்ற கருத்தையே முன்வைத்துவருகின்றனர்.
2023ஆம் ஆண்டின் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் காங்கிரசிற்கு எவ்வளவு முக்கியமான தேர்தலோ, அதே அளவுக்கு பா.ஜ.கவுக்கும் முக்கியமான தேர்தல்தான்.
காங்கிரசைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டு தேர்தலை ஊக்கத்துடன் எதிர்கொள்ள, கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றி என்பது மிக அவசியமான ஒன்றாக இருந்தது.
பா.ஜ.கவைப் பொறுத்தவரை, இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி என்ற இமேஜை உடைப்பதற்கு கர்நாடகத்தில் இருந்த ஆட்சி உதவிகரமாக இருந்தது.
ஆகவே, அதைத் தக்கவைக்க அந்தக் கட்சி விரும்பியது.
ஆனால், இந்தத் தோல்வியால், தென்னிந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளும் காங்கிரசும், பா.ஜ.கவை மீண்டும் ஒரு வட இந்தியக் கட்சியாக சித்தரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தன்னை ஒரு தோற்கடிக்க முடியாத கட்சியாக முன்னிறுத்திக்கொண்ட பா.ஜ.கவுக்கு இது ஒரு பின்னடைவுதான்.
ஆனால், இவையெல்லாவற்றையும்விட பெரிய சவால் என்பது, தேசிய அளவில் பா.ஜ.க. குறித்த பார்வையில் ஏற்படவிருக்கும் தாக்கம்தான் அந்தக் கட்சியை மிகவும் வருத்தும்.
தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத நிலையில், மீண்டும் அது ஒரு இந்தி பேசும் மாநிலங்களுக்கான கட்சி எனப் பலர் விமர்சிக்க இந்தத் தோல்வி வழிவகுக்கும்.
மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் கர்நாடக மாநிலத்தில் 26 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி மேற்கொண்ட யாத்திரைக்கு பலன் கிடைக்கவில்லை என்பது, தேர்தல்களை எதிர்கொள்வதில் பா.ஜ.கவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட திறன் குறித்த கேள்விகளையும் எழுப்பும்.
ராமர் கோவில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, மதரீதியான கோஷங்கள் ஆகியவற்றையே முக்கியப் பிரச்னைகளாக முன்வைத்து, மோடி என்ற தலைவரை மட்டும் முன்னிறுத்தி நாடு முழுவதற்கும் தேர்தலை எதிர்கொண்டுவரும் பா.ஜ.க., இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது பாணியை மறுபரிசீலனை செய்யலாம்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வேலை வாய்ப்பு, நலத்திட்டங்கள் போன்றவற்றுக்கு மிகுந்த ஆதரவு உண்டு.
கர்நாடக மாநிலத் தேர்தலில் இதுபோல சில வாக்குறுதிகளை பா.ஜ.க. அளித்தாலும், அதன் அடிப்படை சித்தாந்தம் இவற்றுக்கு எதிர்மாறாக, பிரம்மாண்டமான வளர்ச்சியையே முன்னிறுத்தியது.
இதனைச் சரியாக புரிந்துகொண்ட காங்கிரஸ் பெண்களுக்கு பேருந்து இலவசம், அரிசி இலவசம், பெண்களுக்கு உரிமைத் தொகை எனப் பல இலவசத் திட்டங்களை அறிவித்தது.
அதேபோல தென்னிந்தியாவுக்கே உரித்தான பிராந்தியப் பெருமிதத்திலும் கையை வைத்தது பா.ஜ.க. நந்தினி பால் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பேச்சு, கன்னடப் பெருமிதத்தை சீண்டியது போலானது. இதனை காங்கிரஸ் மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது.
இந்தத் தோல்விக்குப் பிறகு தென்னிந்தியா குறித்த பா.ஜ.கவின் அணுகுமுறை மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



