fbpx
Homeதலையங்கம்பாஜக இரட்டை வேடம்!

பாஜக இரட்டை வேடம்!

கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன.

மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை - எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதன்பின்னர் இலவசம் குறித்து ஆங்கில ஊடகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து இலவசம் தொடர்பான சர்ச்சை சில மாதங்கள் தொடர்ந்து நீடித்து வந்தது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசியது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது திரிபுரா மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக அங்கு பாஜக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என அறிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தருவது தவறு என்று இதே பாஜகதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தேர்தல் எங்கெல்லாம் நெருங்குகிறதோ அங்கெல்லாம் இலவசங்களை அறிவித்து மக்களை பாஜக தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கும் சம்பவமாக இருந்தாலும் மக்களைப் பாதிக்கும் விஷயமாக இருந்தாலும் அது பாஜகவுக்கு எதிரானதாக இருந்து விட்டால் பிரதமர் மோடி வாயைத் திறக்கமாட்டார். நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் நடக்கும்போது அதனை எதிர்க்கட்சிகள் கண்டிக்கும்; போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அப்போதெல்லாம் பிரதமர் மோடி ஆவேசமாக பல விஷயங்கள் குறித்து பேசுவார், காங்கிரசைத் திட்டித் தீர்ப்பார். ஆனால் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னை குறித்து மட்டும் வாயைத் திறக்க மாட்டார். அதானி விவகாரம், பிபிசி அலுவலகங்களில் சோதனை போன்றவை சமீபத்திய உதாரணங்கள்.

அதேபோலத் தான் பாஜக அமைச்சர்களும் அக்கட்சியின் தேசிய தலைவரும் இலவசங்களை அறிவித்தபோது பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பாஜகவின் இலவச அறிவிப்புகளை பிரதமர் மோடி தடுக்கத் தவறியது ஏன்?. நியாயத் தராசில் வைத்து எடைபார்க்காமல் அவர் முரண்படலாமா?

இதன் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலமாகி இருக்கிறது. ஆட்சியைப் பிடிப்பதற்காக கொள்கையை அடகு வைக்கலாமா?
பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; ஏமாந்து விடக்கூடாது!

படிக்க வேண்டும்

spot_img