தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா கருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். திருவையாறு அருகே கருப்பூர் பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையால் வெற்றிலைக் கொடிகள் சாய்ந்து சேதமாகி உள்ளது. பயிரில் இலைச்சுருட்டு, அழுகல் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்து ள்ளனர்.
இதுகுறித்து விவசாயி குமார் கூறும்போது, “வெற்றிலைக் கொடி நடவு செய்து 5 மாதம் கழித்துத் தான் முதல் அறுவடை செய்ய முடியும். மாதத்தில் 2 மழை இருந்தால் வெற்றிலை பயிர் செழித்து வளரும்.
அதிக மழை, அதிக வறட்சியை வெற்றிலை பயிர்கள் தாங்காது.
கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெற்றிலைக் கொடிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன
இலைச் சுருட்டு, கொடி அழுகல் நோயால் தரமான வெற்றிலை குறைவாகவே கிடைக்கிறது.
இதனால், போதிய வருமானம் இல்லை. எனவே, வெற்றிலை கொடிக்கால்கள் வறட்சி, மழை, காற்று, நோய் போன்றவற்றால் பாதிப்படையும்போது அரசு சார்பில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அதி காரிகள் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.