வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அசாம்,- திரிபுரா எல்லை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறி வருகிறார். தொடர்ந்து இதே கருத்தை பல்வேறு முறை சொன்னபோதும், இம்முறை ஜவுளி துறையில் அதிகமாக வேலை செய்யும் நோக்கோடு திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர், போலி ஆதார் கார்டுகள் மூலமாக அவர்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர் என எச்சரித்துள்ளார்.
வங்கதேசத்தினர் நமது நாட்டின் மக்களோடு மக்களாக வாழ்வதால் அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினம். மேலும் அவர்கள் வடமாநிலங்களின் போலி ஆதார் அடையாள கார்டுகளுடன் வந்து இந்தியாவின் பிறமாநிலத்தவர் போல கால்பதிக்கின்றனர்.
குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் ஜவுளித் துறையில் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற இவர்கள் முன் வருவதால், அவர்கள் யார் என்று தெரியாமலேயே பணிகளில் ஈடுபடுத்துகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் திருப்பூரில் இரண்டு முறை எந்தவித ஆவணங்களும் இன்றி தங்கியிருந்த பத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை காவல்துறை கைது செய்தது. பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழு பேர் சட்டவிரோதமாக தங்கி இருந்ததை காவல்துறை உறுதி செய்தது.
தேசிய புலனாய்வு முகமை, திருப்பூர், பல்லடம்,- வீரபாண்டியில் 11 வங்கதேசத்தினரை கைது செய்தது.
அதேபோல, சென்ற ஆண்டு என்ஐஏ சோதனையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், போலி ஆதார் கார்டுகளுடன் தங்கியிருந்த 44 பேர் பிடிபட்டனர். நேற்றைய தினம் கூட, திருப்பூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்படி அந்நிய ஊடுருவல் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. இத்தனை பேர் பிடிபடும்நிலையில் அவர்களில் ஒருசிலர் தீவிரவாத அமைப்போடு தொடர்புடையவர்களாக இருந்தால் என்னவாகும்?. அதற்கான வாய்ப்பை உதாசீனப்படுத்த முடியாது. சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான சம்பவங்களும் நடந்தேறி உள்ளன.
இதுவரை ஊடுருவரில் ஈடுபட்ட வங்கதேசத்தினரை கைது செய்ததில் என்ஐஏ அமைப்பின் பங்கே அதிகமாக உள்ளது. தற்போது தான் தமிழ்நாடு போலீசார் களமிறங்கி, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறியும் பணியை தீவிரப்படுத்தி வேட்டையாடி வருகின்றனர்.
உடனடியாக அந்நிய நாட்டில் இருந்து தமிழகத்தில் ஊடுருபவர்களுக்கு போலி ஆதார் கார்டு எடுத்து தரும் ஏஜெண்டுகளை கண்காணித்து அவர்களையும் கைது செய்ய வேண்டும். போலி ஆதார் கார்டு கிடைப்பதை முதலில் தடுத்து நிறுத்தியாக வேண்டும். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு இங்குள்ள சிலர், பணத்துக்கு ஆசைப்பட்டு அடைக்கலம் கொடுத்து அவர்களின் அடையாளத்தை மறைப்பது ஆபத்தானது.
ஆகவே, தமிழகத்தின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஊடுருவல்காரர்களைப் பிடிக்க என்ஐஏவும் தமிழக காவல்துறையும் தனித்தனியாகவோ இணைந்தோ சிறப்பு தேடுதல் வேட்டைக்கு திட்டமிட வேண்டும். அதாவது சிறப்பு படைப்பிரிவை உருவாக்கி, அயல்நாட்டு ஊடுருவல்காரர்கள் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்!