fbpx
Homeதலையங்கம்ஜாதிவெறியை வேரறுக்க விழிப்புணர்வு அவசியம்!

ஜாதிவெறியை வேரறுக்க விழிப்புணர்வு அவசியம்!

நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் தாமிர பரணி ஆற்றுப் பகுதியில் மாலை வேளையில் இரண்டு இளைஞர்கள் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, அப்பகுதியில் மது அருந்தி, கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அந்த இளைஞர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இது அநாகரீகமானது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது; வெட்கப்படத்தக்கது.

கேட்பதற்கே காது கூசும் இந்த அருவெறுப்பான செயலில் ஈடுபட்டோர் உடனடியாகக் கைது செய்யப் பட்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கதாகும். அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே நெல்லை மாவட்டம் நாங்குநேரிப் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் தாக்கப்பட்ட கொடுமைக்குப் பின்னால் இருந்த ஜாதி வெறி, கடந்த ஆண்டு வேங்கைவயலில் நடந்த கொடுமை, தற்போது நடந்திருக்கும் தாக்குதல் போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது தொடர்ந்து இத்தகைய நிகழ்வுகள் நடப்பதற்கு ஏதேனும் பின்னணி இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டுவதன் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகிறதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

எப்படியேனும் ஜாதி, மதப் பிரச்சினைகள் மூலம் கலவரத்தைத் தூண்டிவிட வேண்டும் என்று கருதுவோர் இதன் பின்னணியில் ஒருவேளை செயல்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உதாசீனப்படுத்தி விடமுடியாது.

அதனைக் காவல்துறையினர் கண்டறிய வேண்டும். ஜாதி-மத வெறியைத் தூண்டுவோர், வளர்க்க முயல்வோர், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோர் யாரென்பதைக் கண்டுபிடித்து அவர்களின் செயல்பாடுகளை அடியோடு வேரறுக்க வேண்டும்.

ஜாதிப் பிரச்சினைகள் எங்கு நடந்தாலும், அதற்கு உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு மிகமிக அவசியம் என்பதைத் தான் இத்தகைய சம்பவங்கள் நினைவூட்டுகின்றன. ஜாதி வெறியில் இருந்து மக்களை மீட்கவேண்டியது அவசர – அவசியமாக மாறி இருக்கிறது.

இந்த பெரும் பணியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும். அரசோடு சேர்ந்து அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த சமூக நீதி ஆர்வலர்களும் களமிறங்க வேண்டும்.

அப்போது தான் ஜாதி வெறியிலிருந்து மக்களைக் காக்க நிரந்த தீர்வு கிடைக்கும். இந்த தீர்வை எட்ட நீண்ட காலம் கூட ஆகலாம். ஆகட்டும், பொறுத்திருக்கலாம்.
அடுத்த தலைமுறையாவது மாறட்டுமே!

படிக்க வேண்டும்

spot_img