தமிழகம் முழுவதும் இன்றைக்கு முக்கிய விவாதப்பொருளாக மாறி இருக்கிறது, அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம். ஆதாரமின்றி ஆளும் திமுக அரசு மீது வாயில் வந்த புகார்களைக் கூறி சுய விளம்பரம் தேடுகிறார், அரைவேக்காட்டு அரசியல் செய்கிறார், அரசியல் நாகரீகம் தெரியாதவர்…என்றெல்லாம் அவரை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் அண்ணாமலையின் அரசியல் பாணி அப்படியே தொடர்கிறது.
தற்போது ரபேல் வாட்ச் களத்தில் உள்ளது. அதன் விலை எவ்வளவு? ரூ.4 லட்சமா? அதற்கான பில் எங்கே? என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்க, அண்ணாமலையோ அதற்கு நேரடியாகப் பதில் கூறாமல் திமுக தலைவர்களின் சொத்து விபரங்களை பட்டியலிடப் போவதாக தெரிவித்து இருக்கிறார்.
இந்த விவாதத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நிலையில், பில் இருக்கா, இல்லையா? என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்கிறோம்.
ஆம்/ இல்லை என்பது தானே பதிலாக இருக்க முடியும்? ஏப்ரலில் பட்டியல் வரும், மே மாதம் வெயில் அடிக்கும் என்றெல்லாம் அளப்பதா? என அமைச்சர் டுவிட் செய்ய அதற்கும் விடாது பதில் அளித்திருக்கிறார் அண்ணாமலை. விவாதம் மேலும் சூடுபிடித்தது.
2024 தேர்தலில் 25 எம்பிக்களைப் பெற்று திமுகவுக்கு முடிவுரை எழுதப்போவதாக தன் பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக, ரபேல் விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.
இதுவரை அமைதியாக பதிலளித்து வந்த திமுக இத்தகைய பதிலடி சொற்போரை அண்ணாமலைக்கு எதிராக முன்னெடுத்து இருப்பது ஏன்? எப்போது பார்த்தாலும் திமுக பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆதாரமின்றி அற்பமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் லாபம் பார்க்கும் அண்ணாமலைக்கு அதே பாணியில் பதில் தர திமுகவினரும் தயாராகி விட்டார்கள் போலும்.
அவர் எந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு ஆதாரமே இருப்பதில்லை என்பது வெள்ளிடைமலை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த திமுக இப்போது பொங்கி எழுகிறதோ?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எத்தனையோ விவாதங்கள் தேவைப்படுகிறது. அவை குறித்து ஆய்ந்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் முன்வரவேண்டும். அது தான் தமிழக மக்களுக்கு நலம் பயக்குமே தவிர, ரபேல் வாட்ச் போன்ற அற்ப விவாதம் அல்ல.
எப்போதும் தேவையில்லாத கூற்றைக் கையிலெடுத்து அரசின் செயல்பாட்டுக்கு… மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் குந்தகம் விளைவிப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதாவது கட்சி வளரவேண்டும் என்பதற்கே இப்படியெல்லாம் செய்வது எதிர்மறையாகத்தான் முடியுமே தவிர நன்மை தராது என்றே அரசியல் விமர்சகர்களும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அண்ணாமலை சொல்வது போல நாடாளுமன்றத் தேர்தலில் 25 இடங்களைப் பிடிக்க முடியுமோ… முடியாதோ? தொடர்ந்து பத்திரிகைகளிலும் மீடியாக்களிலும் தவறாமல் இடம் பிடித்து வருகிறார் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
ரபேல் வாட்ச் சர்ச்சைக்காவது முதலில் முற்றுப்புள்ளி வையுங்கள்!



