அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தரப்பை நீக்கி விட்டதாக இபிஎஸ்ஸும், இபிஎஸ் தரப்பை நீக்கி விட்டதாக ஓபிஎஸ்சும் அறிவித்து, தனித் தனியாக இயங்கி வருகின்றனர். தற்போது அதிமுகவில் இருந்து அமமுக என்கிற ஒரு கட்சி, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகிய 3 பிரிவுகள் என நான்காக பிரிந்து கிடக்கிறது.
அதிமுக ஒருங்கிணைந்தால்தான், வரும் மக்களவைத் தேர்தலில், சிதறாமல் அவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. மூவர் இசைந்தாலும், இணைப்பிற்கு இப்போது வரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிடி கொடுக்கவில்லை.
இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஓ.பி.எஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவாக பேசிய ஒபிஎஸ், ‘கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்’ என்று அழுத்தமாக பதிவு செய்தார்.
தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கிப்பார்’ என்று இபிஎஸ்க்கு சவாலும் விட்டார். கட்சி ஒற்றுமைக்காக பல அவமானங்களை சகித்துக் கொண்டேன். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி கபளீகரம் செய்ய விட மாட்டேன். அதிமுகவிற்காக உழைத்த அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
இதற்கிடையே, கட்சியின் வரவு செலவு கணக்கை இடைக்காலப் பொது செயலாளர் என்று இபிஎஸ் தரப்பு சமர்ப்பித்ததை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இது ஒரு விஷயமில்லை. பொருளாளராக நான் கொடுத்த கணக்கைத்தான் கொடுத்துள்ளனர்’ என்றார்.
மேலும், ஓபிஎஸ் தரப்பினர் ஒரு பொதுக்குழுவை கூட்டி, நாங்கதான் உண்மையான அதிமுக என்று மீண்டும் உரிமை கோரவும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் யாருக்கு வாய்ப்பு என்பது இருதரப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பொருத்தே அமையும். இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கோருவதால், இரட்டை இலை யாருக்கும் இல்லாமல் முடக்கம் செய்யப்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பொதுக்குழு குறித்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும் நம்பிக்கை ஓபிஎஸ் தரப்பிற்கு ஒருபக்கம் இருந்தாலும், சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றாலும் ஓங்கி அடித்து ஆடும் திட்டத்தையும் ஓபிஎஸ் தரப்பு வைத்துள்ளது என்றே கணிக்கப்படுகிறது.
என்னவாகப் போகிறதோ அதிமுகவும் இரட்டை இலையும்? பொறுத்திருந்து பார்ப்போம்!



