கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆளும் பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்கின்றன கருத்து கணிப்புகள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றும் என்ற கருத்துக் கணிப்பு முடிவே அதிகமாக முன்வைக்கப்படுகிறது. இந்த இரு பெரும் கட்சிகளிடையே ஜேடிஎஸ், இருப்பை தக்க வைக்க பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல சேனலான டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியை பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மாறாக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஏராளமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இருகட்சி தலைவர்களும் கலக்கமடைந்துள்ளனர்.
அதேவேளையில் பிரதமர் மோடி பிரசாரத்தை மையப்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக வியூகம் அமைத்துள்ளது.
இந்த அரசியல் களேபரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் வேறு அங்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை. அவரை பாஜக மேலிடப் பொறுப்பாளராக அறிவித்தது முதலே தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை.
பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வின் போது அண்ணாமலை பரிந்துரைத்த பெயர்களுக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணாமலையால் பாஜகவில் அதிக அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியிடும் நிலைமை உருவாகிவிட்டதாக கூறப்பட்டது.
இதனால் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டார் அண்ணாமலை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி அப்போது பயணம் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அண்ணாமலை, தமிழ்நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு பிரச்சனையை உருவாக்கி இருந்தார் பாஜகவுக்குள்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் அண்ணாமலை மீது காங்கிரஸ் பகீர் புகார் ஒன்றை கூறியது. அதாவது ஹெலிகாப்டரில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பெருமளவு பணத்தை எடுத்துச் சென்றார் அண்ணாமலை என்பது அந்த புகார். இந்த புகாரும் கர்நாடகா தேர்தல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. அவர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் அதிகாரிகளை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கு நெருக்கடி தருகிறார்.
இதனால் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் பட்டுவாடா நடைபெறுகிறது. அண்ணாமலை முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை சோதனையிடுவதும் இல்லை.
பல்வேறு காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை ரெய்டு வரும் என மிரட்டல் விடுக்கிறார் அண்ணாமலை. ஆகையால் அண்ணாமலை, கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்யவும் கர்நாடகாவில் தங்கவும் தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்ச்சை நாயகனாக வலம் வந்த அண்ணாமலை, கர்நாடகா தேர்தல் களத்திலும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அங்கும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? அதனை நிர்ணயிக்கப்போவது கர்நாடக தேர்தல் முடிவாகத் தான் இருக்குமோ? அது தமிழக பாஜகவில் எதிரொலிக்கும் என்பதிலும் ஐயமில்லை!



