fbpx
Homeதலையங்கம்அண்ணாமலையை குறிவைக்கும் அதிமுக!

அண்ணாமலையை குறிவைக்கும் அதிமுக!

தமிழ்நாட்டில் அரசியலில் கூட்டணியில் இருந்தாலும் அதிமுக –& பாஜக இடையே தொடர் மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு, அதிமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தான் அண்ணா குறித்த அண்ணாமலை பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும், கூட்டணி தொடர்வதாக கூறி வந்தனர்.

இந்த சூழலில் நேற்று வரை தமிழகத்தில் தொடர்ந்து வந்த அதிமுக & பாஜக கூட்டணி, தற்போது இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து விட்டார். இதுதான் அதிமுகவின் முடிவு எனவும் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த முடிவானது தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாஜக – அதிமுக கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டிருக்க கூடிய நிலையில், டெல்லியில் இருந்து தொடர்புகொண்ட பாஜக மேலிடத்துக்கு அதிமுக நிபந்தனை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால் பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்றும் அவரை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணி எனவும் அதிமுக நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா, அண்ணாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை விமர்சித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சித்த நிலையில், கூட்டணியை எப்படி தொடர இயலும்? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

கூட்டணியில் அதிமுக நீடிக்க வேண்டும் என பாஜக தலைமை கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், பாஜக மேலிட தலைவர்கள் மீது தங்களுக்கு அதிருப்தி இல்லை என அதிமுக தலைமை கூறியுள்ளது. அதிமுக நிபந்தனை குறித்து டெல்லி பாஜக மேலிட நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதாகவும்கூறப்படுகிறது.

இதன் எதிரொலி எப்படி இருக்கும்? அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்குமா? என்றால் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அதே நிபந்தனையில் அதிமுக உறுதியாக இருக்குமா? என்றால் அதுவும் நடக்காது.

துண்டான எலும்பை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் ஒட்டவைத்து விடுவது போல ஏதோ மந்திர மாயாஜாலம் மூலம் கூட்டணி முறிவு வாபஸ் ஆகும். வரும் 2024 தேர்தலிலும் அதிமுக & பாஜக கூட்டணி நீடிக்கும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து. ஏனென்றால் பாஜகவை முழுமையாக எதிர்த்தால் என்னென்ன நடக்கும் என்பது எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும்.
எது எப்படியோ?

தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை இருக்கும் வரை படிக்க பரபரப்பான செய்தி கிடைத்துக் கொண்டே இருக்கும்!

படிக்க வேண்டும்

spot_img