தமிழ்நாட்டில் திமுக மட்டுமின்றி, எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பல விஷயங்களை பற்றி பேசிய அண்ணாமலை, தனது ரபேல் வாட்ச் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து வாங்கியது என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பேட்டியில் ஊழல் பற்றி பேசிய அண்ணாமலை, ஊழல் பட்டியலில் திமுகவிற்கு எதிராக பற்றி மட்டும் பேச மாட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையை அப்படியே எதிர்க்க வேண்டும். அடி ஆழத்தில் இருந்து எதிர்க்க வேண்டும்.
திமுக பைல்ஸ் என்பது இப்போது முடிய போவது இல்லை. இது பார்ட் ஒன்றுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம்.
அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம். லோக்சபா தேர்தலுக்கு முன் இதை பற்றி எல்லாம் பேசுவோம். அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசுவோம். ஆட்சியில் இருந்த எல்லா கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவேன்.
அண்ணாமலை இருக்கும் வரை அதை தடுக்க முடியாது. இது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். 2024க்கு முன் ஆட்சியில் இருந்து அனைவரையும் பற்றி பேசுவேன் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார்.
அதாவது திமுக மட்டும் கிடையாது அனைத்து கட்சிகளும் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக என்கிறார் அண்ணாமலை. இது அதிமுகவுக்கு மிரட்டலா? என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தி உள்ளது.
அதோடு இவர்களின் தயவில் எம்பி ஆக வேண்டும் என்று அவசியம் இல்லை. 10 தேர்தலில் தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை, என்று அண்ணாமலை குறிப்பிட்டு உள்ளார். இதனால் அதிமுகவை சுட்டிக்காட்டித்தான் அவர் பேசுகிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக ஊழலையும் வெளியிடுவேன் என பேசிய அண்ணாமலைக்கு அதிமுக தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. நாட்டுக்காக அண்ணாமலை மட்டுமே பாடுபடுவது போல அவர் பேசக்கூடாது என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இடித்துரைக்கிறார்.
மொத்தத்தில் அதிமுகவுடன் மோதல் போக்கை அண்ணாமலை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த உரசல் போக்கு நீடித்தால் 2024 தேர்தலில் அதிமுக&பாஜக கூட்டணியை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை!



