உலகப் பொதுமறையான திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும் 1,330 தமிழர்கள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்து ஒப்புவித்து சாதனை படைத்தனர். இது நடந்திருப்பது தமிழகத்தில் அல்ல… அமெரிக்காவில் என்பது தான் பெருமைக்குரிய விஷயம்.
அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சாதனை முயற்சியில் இறங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வரை இந்த சாதனை முயற்சிகள் தொடர்ந்தன.
அமெரிக்க நகரங்களான வாஷிங்டன், சான் பிரான்சிஸ்கோ, சிக்காகோ, ஜாக்சன்வில்லே, டல்லாஸ், சின்சினாட்டி, சான் அண்டோனியோ, ஆஸ்டின் போன்ற பல்வேறு நகரங்களில் செயல்படும் தமிழ்ச் சங்கங்கள் ஒன்றிணைந்து இதற்கு ஏற்பாடு செய்தன.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுப் பிரிவினரும் அதில் பங்கேற்று திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்தனர். குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் மேற்பார்வையில் அந்த நிகழ்ச்சிகள் நடந்தேறின.
வெவ்வேறு நகரங்களில் இருந்தவாறு 1,330 பேர் 1,330 குறள்களையும் காணொளி மூலம் மனப்பாடமாக ஒப்புவித்த செயல், அரியதொரு சாதனையாகப் போற்றத்தக்கது. அதற்கேற்ப, ‘ஹை ரேஞ்ச்’, ‘ஸ்பாட்லைட்’ என்னும் அந்நாட்டின் இருவேறு பிரபல சாதனைப் புத்தகங்களில் அந்தச் செயல் பதிவாகி உள்ளது.
கடல் கடந்து வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தமிழ்மொழியை மறக்காமல் அங்கெல்லாம் செம்மொழியாம் தமிழைப் பேசியும் தொடர்ந்து கற்றும் வளர்த்தெடுத்தும் வருகின்றனர் என்பதற்கு இந்த சாதனை ஓர் அத்தாட்சி.
அமெரிக்காவில் நடந்த இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களை மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களின் மொழி உணர்வுகளை தட்டி எழுப்பி இருக்கிறது.
இது போன்ற தமிழ் இலக்கிய நிகழ்வுகளை பிற நாடுகளில் வாழும் தமிழ்ச் சங்க அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும். ஏன், தமிழ்நாட்டில் கூட தமிழில் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தப்பட வேண்டும் என அமெரிக்க வாழ் தமிழர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
சாதனைத் தமிழர்களை நன்றியோடு வாழ்த்துவோம்!



