fbpx
Homeதலையங்கம்மும்மொழிக் கொள்கையில் மூக்கை நுழைக்கும் யுஜிசி!

மும்மொழிக் கொள்கையில் மூக்கை நுழைக்கும் யுஜிசி!

தமிழ்நாடு கடந்த 1968ம் ஆண்டு முதல் இரு மொழிக் கொள்கையை மட்டுமே பின்பற்றி வருகிறது. அதாவது, தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் முதன்மை மொழியாகவும், ஆங்கிலம் இரண்டாவது மொழியாகவும் கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது திடீரென மூன்றாவதாக ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சொல்வதுதான் பிரச்சனையை கிளப்பிவிட்டிருக்கிறது.

மூன்றாவது மொழி எனில் பிரெஞ்சு, ஸ்பானிஷ், லத்தீன், ஜெர்மன் போன்ற மொழிகள் கிடையாது. இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு என இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றைதான் கற்க வேண்டும். “மூன்றாவதாக ஒரு மொழியை கத்துக்கிட்டா தான் என்னவாம்?” என்று பாஜகவினர் கேள்வி எழுப்ப, “அதெல்லாம் முடியாது.

இரண்டு மொழியை வச்சுக்கிட்டே நாங்க சர்வதேச அளவில் முன்னேறியிருக்கிறோம். மூன்றாவது மொழியை கத்துக்கச் சொல்வது, கல்வித் தரத்தை மேம்படுத்தாது என்பது ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்று தமிழ்நாடு அரசு மட்டுமல்ல, ஆய்வு அறிக்கைகளை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு கல்வியாளர்களும் கருத்தை முன்வைக்கிறார்கள்.

இப்படி இருக்கையில்தான் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மும்மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது. யுஜிசிக்கான வேலை இது கிடையாது.

கல்விக்கான காசை கொடுத்தோமா, தேர்வுகளை நடத்துனோமானு.. இருக்கனும். கல்வி மத்திய-மாநில அரசுகளின் பொது பட்டியலில் இருக்கின்றன. எனவே எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று தமிழ்நாடு அரசு தெளிவாக கூறியுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல முறை தனது உத்தரவுகளில் குறிப்பிட்டிருக்கிறது. உதாரணமாக கடந்த 2008ம் ஆண்டு, அசோக்குமார் தாகூர் என்பவர் மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், யுஜிசிக்கான அதிகாரம் குறித்து நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.

யுஜிசிக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிகாரம் இருக்கிறது. அதாவது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் குறைந்தபட்ச கல்வி தரத்தை நிர்ணயித்தல், தேர்வுகளை நடத்துதல் போன்றவற்றிக்கு யுஜிசிக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், ‘கொள்கை’ சார்ந்த விஷயங்களில் யுஜிசிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது.

அதனால் தான், மும்மொழி குறித்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு யுஜிசி எப்படி உத்தரவிட முடியும்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. யுஜிசியின் அறிவிப்பு கொள்கை சார்ந்த விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மும்மொழி கொள்கை என அது தேவையில்லாமல் மூக்கை நுழைத்திருக்கிறது. அந்த அறிவிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாட்டு கல்வியாளர்களும் மாணவர்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எதிர்கால இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் மாணவர்களின் கல்வி விஷயத்தில் தேவையில்லாத விளையாட்டு வேண்டாம். எனவே, யுஜிசி தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img