fbpx
Homeதலையங்கம்அதிமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடும் அன்புமணி!

அதிமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடும் அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், அக்கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களின் ஆதரவு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தரப்பு தொடர்ந்து தெரிவித்து வந்தது.

இந்தநிலையில் பாமக அதிகாரப்பூர்வமாக அன்புமணி தலைமையில் செயல்படுவதாக தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அன்புமணிக்கு ஆதரவாகவே உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது ராமதாசை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. உச்சநீதிமன்றத்தை நாடவும் அவர் தயாராகி வருகிறார். அதோடு தேர்தல் நேரத்தில் பாமகவின் இருதரப்பினரின் மோதல் தொடர்ந்தால் மாம்பழச் சின்னம் முடக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. இது அன்புமணியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பொதுவாக இதுபோன்ற உட்கட்சி மோதலில், இரண்டு தரப்புக்கும் தனித்தனி கட்சி பெயர் மற்றும் வேறு சின்னம் ஒதுக்கீடு என்ற நிலைக்கு இட்டுச் செல்லும். அடிப்படையில் சின்னம் என்பது கட்சிகளுக்கு சொந்தமானது அல்ல.

சின்னம் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தம். தேர்தல் ஆணையம் பயன்பாட்டு உரிமையை வழங்குகிறது. பயன்பாட்டு உரிமையை ஒரு கட்சி பதிவுபெற்ற பிறகு நிபந்தனை அடிப்படையிலோ அல்லது பதிவுக்கு பிறகு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்றாலோ நிரந்தரமாகவும் ஒதுக்குகிறது. ஆக, பாமவுக்கான சின்னம் என்பது மாம்பழம். ஆனால், அவர்கள் அங்கீகாரத்தை இழந்துவிட்டார்கள்.

இன்றைய நிலைமையில் பாமக என்பது ஒரு பதிவுபெற்ற கட்சி மட்டும்தான். இப்படியான சூழலில் பதிவு பெற்ற கட்சிக்கு இரண்டு தரப்பும் உரிமை கொண்டாடுகிறது. இரண்டு தரப்பும் வெவ்வேறு ஆவணங்களை முன்வைக்கிறது.

அன்புமணி தரப்பின் ஆவணம் போலியானது என்று ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இந்தநிலையில், தேர்தல் ஆணையம் ஆவணங்களுடன் இரு தரப்பையும் அழைத்து பேச வேண்டும். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஆணையம் அவ்வாறு செய்யவில்லை.

ஆனாலும் தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவுகளின் படி பாமக அன்புமணியிடம் தான் உள்ளது. இந்தநிலையில் நேற்று திடீரென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி தரப்பினர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சில கட்சிகள் வரும் என தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக தெரிவித்து வந்த நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள, பாமகவின் சாதி வாரிய கணக்கெடுப்பை வலியுறுத்தும் போராட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என பாமக அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னரே தாங்கள் நடத்தப்போகும் ஆர்ப்பாட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமியை பாமக அழைக்கிறது என்றால், கூட்டணிக்கான வாய்ப்புகள் இல்லை என்று புறம்தள்ளிவிட முடியாது.

இது கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. திமுகவிற்கு எதிரான அரசியலை கையிலெடுத்துள்ள அன்புமணி, எதிரணியில் தான் கூட்டணி வைப்பார் என்பது திண்ணம். அவரது தேர்வு அதிமுக & பாஜக கூட்டணி என்பதைத் தான் போராட்ட அழைப்பு வெளிப்படுத்துகிறது.

வருடக்கணக்கில் தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர் போல பாமகவில் இரு தரப்பு மோதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதப் போர் முதலில் முடியுமா? உரிமைப் போர் முதலில் முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img