6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோவையில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/ உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (டெபிட் கார்டு) வழங்கினார்கள்.
தமிழ்நாட்டில் பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்து, அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், ‘தமிழ்ப் புதல்வன்’ எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள், பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டது.
உயர்கல்வி, மாணவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு, புதுமைப் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழ்ப் புதல்வர்களாகிய மாணவர்களுக்கும் தாயுமானவனாக என்றும் உடனிருப்பேன் என்னும் விதமாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், விவசாயம், செவிலியர், மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டம், பொறியியல், தொழிற்கல்வி சார்ந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு, பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையை அவர்கள் முழுமையாக அப்படிப்பினை படிக்கும் பாட நெறி காலத்திற்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்வி இலக்கினை அடையவும், எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்றிடவும் இயலும்.
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று இந்திய அரசு / தமிழ்நாடு அரசு / பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசால் 2024- 2025-ஆம் நிதியாண்டிற்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். மேலும், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு முடித்து, தொழிற்பயிற்சி பயில்வோரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 242 கல்லூரிகளில் பயிலும் 15,754 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த, கோவை மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கும் மாணவர் சரவணகுமார் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு அரசியல் அறிவியல் படிக்கிறேன். என்னுடைய குடும்பம் ஏழ்மையானது. என்னுடைய அப்பா கூலி வேலைதான் செய்கிறார்கள். அம்மா வீட்டில்தான் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டுதான் என்னை படிக்க வைக்கின்றார்கள்.
இந்த சூழ்நிலையில் என்னுடைய படிப்பு செலவுகள், புத்தகம் வாங்குவது, தேர்வு கட்டணம் உள்ளிட்டவைகளுக்காக அவர்களிடம் பணம் கேட்பது மிகவும் சங்கடமாக இருந்தது. எனவே, நான் மாலை நேரத்தில் கல்லூரி முடிந்தபிறகு பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து என்னுடைய கல்லூரிக்கான செலவுகளை நானே கவனித்துகொண்டு, படித்துவந்தேன்.
வேலை முடிந்து இரவு வெகுநேரம் கழித்து வருவதால் என்னுடைய படிப்பில் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 கிடைக்கின்றது. இந்த தொகையை கொண்டு என்னுடைய படிப்புச் செலவினை நானே பார்த்துக்கொள்வேன்.
வீட்டிலிருந்து பணம் வாங்கவேண்டிய அவசியமில்லை. பகுதிநேர வேலையினை விட்டுவிட்டு இனிமேல் என்னுடைய படிப்பில் முழு கவனம்செலுத்தி படிக்கபோகிறேன். என்னுடைய வறுமை நிலையிலிருந்து மீண்டு, படிப்பில் என்னுடைய முழு கவனத்தை செலுத்த காரணமாக இருந்தது இந்த தமிழ்ப் புதல்வன் திட்டமாகும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். இந்த பெருமைக்குரிய திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த சுங்கம் சாலையில் உள்ள பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர் ஜேக் பெர்னன்டஸ் தெரிவித்ததாவது:
கோவை சுங்கம் பைபாஸில் உள்ள பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் படிக்கிறேன். எங்க அப்பா கூலி வேலைதான் செய்கிறார். ஊர், ஊராக போய் அவர் வேலை செய்தால்தான் அவருக்கு சம்பளம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் எங்க அப்பா – அம்மா என்னை படிக்க வைக்கிறதே மிகப்பெரிய கஷ்டம்தான்.
இருந்தாலும் அவங்க என்னை ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறாங்க. என்னை படிக்க வைக்கிறதே மிகப்பெரிய கஷ்டத்தில் நான் அவர்களிடம் போய், புத்தகம் வாங்கவும், தேர்வு கட்டணம் கட்டவும் பணம் கேட்க எனக்கு மிகவும் மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்கள், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் உதவித்தொகையினை கொண்டு, என்னுடைய படிப்புக்கு தேவையான நோட்டு, புத்தகம், ஸ்டேனசரி பொருட்கள், பேருந்து பயண கட்டணம் உள்ளிட்ட படிப்புக்கு தேவையான செலவுகளை என்னால் பார்த்துக்கொள்ளமுடியும்.
சிறுதுளி பெருவெள்ளம் போல் இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவித்தொகை எனக்கு பேரூதவியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்வி பயிலவேண்டும் என இத்திட்டத்தை கொண்டுவந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு என்னை போன்ற மாணவர்கள் அனைவரின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
கி.மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு
அலுவலர் (செய்தி),
கோவை மாவட்டம்.



