பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். கூட்டணியில் இருந்து போனால் போகட்டும், அது அவர்களது விருப்பம். கூட்டணி விவகாரம் குறித்து பாஜக தலைமை தான் முடிவு எடுக்கும்.
நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். இனி டெல்லி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… அவர் அதிமுக பற்றி இங்கே பேசவில்லை. அதிமுக என்ற பெயரை நேரடியாக சொல்லவில்லை.
அதிமுக கூட்டணி பற்றி டெல்லி யோசிக்கும் என்றுகூட அவர் சொல்லவில்லை. பாஜகவிற்கும் – திமுகவிற்கும் நேரடியாக போட்டி என்று மட்டுமே கூறியுள்ளார்.
அதிமுக பற்றி எதுவும் பேசக்கூடாது என அண்ணாமலைக்கு பாஜக மேலிடம் டெல்லியில் கடிவாளம் போட்டு சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
ஏற்கனவே பாஜக பற்றி பேச கூடாது, பாஜகவை விமர்சனம் செய்ய கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். தற்போது அண்ணாமலை அதிமுக பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார்; கூட்டணி பற்றி பேசாமல் தவிர்த்து உள்ளார்.
இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விமர்சனம் செய்யாமல் தவிர்த்து விட்டனர்.
இன்னொரு பக்கம் மோடியை எடப்பாடி எதிர்க்க மாட்டார். பாஜக தலைவர்களை எடப்பாடி எதிர்க்க மாட்டார். அப்படி இருப்பதால் அண்ணாமலையும் இங்கே அதிமுகவை எதிர்க்க மாட்டார்.
அதிலும் அதிமுகவின் ஊழல் பற்றி கேள்விக்கும் கூட அண்ணாமலை பதில் அளிக்கவில்லை. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு இருதரப்பும் மௌனம் காத்தால் அங்கே ஒரு உறவு மறைந்திருக்கிறது என்பது தானே அர்த்தம்.
அதனால் பாஜக – அதிமுக கூட்டணி ஒருபோதும் உருவாகாது என்ற தற்போதைய நிலையில் மாற்றம் வரக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை.
தேர்தல் தேதி நெருங்கட்டும்; காத்திருப்போம்!



