fbpx
Homeதலையங்கம்அம்பேத்கரை விடவும் வேறு யாருக்குத் தகுதி உள்ளது?

அம்பேத்கரை விடவும் வேறு யாருக்குத் தகுதி உள்ளது?

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் சிலைகள், உருவப்படங்கள் தவிர மற்ற தலைவர்களின் சிலைகள், உருவப்படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

நீதிமன்ற வளாகங்களில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், படங்கள், சிலைகள் வைக்க வேண்டுமென்று வழக்குரைஞர்கள் சங்கங்களிடமிருந்து வரும் கோரிக்கைகள், தேசியத் தலைவர்களின் உருவச்சிலைகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இந்த நிலைபாட்டை உயர்நீதிமன்ற முழுமை அமர்வு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் இந்த அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்க்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கரின் உழைப்பும், பங்களிப்பும் அளப்பரியது என்பதை உலகமே அறியும். அவருடைய சிலை, உருவப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதால் சட்டம் & ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற கருத்து ஏற்புடையதாக இல்லை.

எனவே, உயர்நீதிமன்ற பதிவாளர் இந்நடவடிக்கையை உடடினயாக திரும்பப் பெற வேண்டும், காந்தியடிகள், திருவள்ளுவர் ஆகியோருடன் அம்பேத்கரின் சிலைகள், உருவப் படங்கள் நீதிமன்ற வளாகங்களில் இடம்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்ற கருத்துரு மாநிலம் முழுவதும் உருவானது.

ஏனெனில் மற்ற அரசியல் தலைவர்களுடன் ஒப்பீடு செய்ய முடியாத தனித்தன்மை கொண்டவராக அம்பேத்கர் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார். மேலும் அவரது படத்தை நீதிமன்றங்களில் வைத்தும் சிலைகளாக நிறுவியும் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டோம். பிறகு ஏன் அகற்ற வேண்டும்?

தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

வைகோ, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதே கருத்துக்கு அழுத்தம் தந்தனர். போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படங்களை அகற்றக்கூடாது என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவும் இருந்தது.

இதனைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என அறிவித்து இருக்கிறார்.

நம்நாட்டின் நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களோடு இடம்பெற சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்குத் தகுதி உள்ளது?

கோரிக்கையை உடனடியாக ஏற்ற தலைமை நீதிபதிக்கு நன்றி…நன்றி…நன்றி!

படிக்க வேண்டும்

spot_img