fbpx
Homeதலையங்கம்உச்சநீதிமன்றத்தின் கண்டனக் குட்டுகள்!

உச்சநீதிமன்றத்தின் கண்டனக் குட்டுகள்!

கடந்த 11ம் தேதி உச்சநீதிமன்றம் ஜனநாயகப் பாதுகாப்பை அடிநாதமாகக் கொண்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது.

அமலாக்கத் துறையின் தலைமை அதிகாரி மிஸ்ராவுக்கு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு – சிறிதும் கூச்சமின்றி – மூன்றாவது முறையாக பதவி நீடிப்பு கொடுத்த அந்த ஒன்றிய அரசின் ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது, உச்சநீதிமன்றம். ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்திற்கு சரியான குட்டு வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

மூன்றாவது முறையாக இந்த மிஸ்ராவுக்கு பதவி நீடிப்பு அதுவும் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பினை மதிக்காமல், அதற்கு எதிராகவே தரப்பட்டுள்ளது. இதனையே உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி, இப்படி ஓர் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணைய உறுப்பினருக்கு 7வது முறை முடிந்து 8 வது முறை பதவி நீடிப்பு என்பதாக ஒன்றிய மோடி அரசு பதவி நியமனத்தை நீட்டித்தபோது, நீதிபதிகள், ‘‘அவர் என்ன அவ்வளவு இன்றியமையாதவரா? ஏன் ஒருவருக்கே இத்தனை முறை தொடர் பதவி நீடிப்புகள்?’’ என்று சுட்டிக்காட்டி, கண்டிக்கவில்லையா? ‘‘அவர் இல்லையானால் அந்த அமைப்பே இயங்காதா?’’ என்று நீதிபதிகள் கண்டித்தார்களே அதன்பிறகும் ஒன்றிய அரசு துக்ளக் தர்பார் போல செயல்படத் துணிவது எந்த வகையில் நியாயம்?

எதற்கெடுத்தாலும் -எதிர்க்கட்சித் தலைவர்கள், -அமைச்சர்கள்,- சட்டமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அடி பணிய வைக்கும் நவீன ஆயுதமாகவே அமலாக்கத் துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.

தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., வருமான வரித் துறை ஆகியவை திரிசூலங்களாகவே, அரசியல் எதிரிகள்மீது ஏவப்படுகின்றன. அவர்கள் அக்கட்சிகளை விட்டு வெளியேறி ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு மாறிவிட்டால் நடவடிக்கைகள் காணாமற்போவதும் கண்கூடாக நடப்பதைப் பார்க்கிறோம்.

இந்தியாவில் நடக்கும் இதுபோன்ற அதிகார மீறல்கள், வெளிநாடுகளிலும் விவாதப்பொருளாகி விடுகிறது. இதனை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசின் மீது உச்சநீதிமன்றம் வைக்கும் கண்டனக் குட்டுகள் தொடர்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல!

படிக்க வேண்டும்

spot_img