fbpx
Homeதலையங்கம்டெல்லியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்?

டெல்லியில் தலைதூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்?

டெல்லி நீதிமன்றத்தில் இரு வழக்கறிஞர்கள் குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒரு தரப்பினர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே துப்பாக்கியில் சுடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக வழக்கறிஞர்கள் என்றால் கருப்பு அங்கி அணிந்து கொண்டு, நீதிமன்றத்தில் தன் கட்சிக்காரருக்காக, நீதியை நிலைநாட்ட வாதிடுவார்கள் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். திரைப்படங்களில், ஏன் நிஜத்தில் கூட பார்த்திருப்போம்.

ஆனால், டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் கொஞ்சம் குசும்புக்காரர்கள் போல. தங்களுக்கு வாதாடவும் தெரியும், துப்பாக்கியால் சுடவும் தெரியும் என்பதை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நிரூபித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கம் போல நீதிமன்றம் இயங்கி கொண்டிருந்த சமயத்தில் இரு வழக்கறிஞர் குழுக்கள் இடையே ஏதோ சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டை மாறி பெரிய மோதலாக வெடித்துள்ளது. அப்போது ஒரு வழக்கறிஞர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து எதிர் தரப்பை மிரட்ட துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பான செய்தி மட்டுமல்ல, வேதனை தரும் செய்தியுமாகும்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பலரும் உங்களுக்கு மட்டும் துப்பாக்கி என்ன பெட்டி கடையிலையா கிடைக்குது? பொசுக்கு பொசுக்குன்னு எடுத்து சுடுறீங்க? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீதிமன்ற வளாகத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது சாதாரண விஷயமல்ல. ஏதோ பாகிஸ்தானிலோ ஆப்கானிஸ்தானிலோ நடப்பது போல சம்பவத்தை நம் நாட்டுத் தலைநகரில் நிகழ்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞர்களே துப்பாக்கியால் சுட்டு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருப்பதை டெல்லி பார் கவுன்சில் கண்டித்து இருக்கிறது.

நேற்று மாலை கூட, வடக்கு டெல்லியின் சராய் ரோஹில்லா பகுதியில் 55 வயது பெண்ணை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறி இருக்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும் துப்பாக்கியை கையிலெடுப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அந்த கலாச்சாரம் டெல்லியில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் பரவவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை மூலம் துடைத்தெறிய வேண்டும்.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுக்க அந்தநாட்டு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும் சிறுவர்கள் கூட துப்பாக்கி சூடு நடத்தி பலர் உயிரைப் பறிக்கும் காரியங்கள் நடந்தேறி விடுகிறது. தடுக்க முடியாமல் அந்நாட்டு அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அதேபோன்ற நிலை நம்நாட்டிலும் உருவாகி விடக்கூடாது. மத்திய& மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காவல்துறை கடும் நடவடிக்கைகள் மூலம் முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்.
தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி விடக் கூடாது!

படிக்க வேண்டும்

spot_img